செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2017 (11:56 IST)

இன்று இறுதி விசாரணை - இரட்டை இலை யாருக்கு?

இரட்டை இலை தொடர்பான இறுதி விசாரணை இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ளது.


 

 
அதிமுகவில் எடப்பாடி அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி என இரு அணிகள் உருவான போது, இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் எனவும், பெரும்பாலான நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருப்பதாகவும் ஓ.பி.எஸ் அணி ஆர்.கே.நகர் தேர்தலின் போது, தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தது. 
 
மறுபக்கம் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என எடப்பாடி அணியும் தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தது. அவர்கள் போதாது என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா தரப்பிலும், இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
 
அதன் பின், எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை நடத்தி, அதன் தீர்மானங்களை தேர்தல் கமிஷனில் சமர்பித்து, பெருவாரியான நிர்வாகிகள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் தங்களை கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என தினகரன் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது.


 

 
இந்நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், இரட்டை இலை தொடர்பாக வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது. 
 
அதைத் தொடர்ந்து, இரட்டை இலை தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய செப்.29ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தங்கள் தரப்பில் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய தினகரன் தரப்பு மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டது. ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 
 
எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி ஆகியவை சார்பில் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறவுள்ளது. ஏற்கனவே எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் ஏற்கனவே முகாமிட்டுள்ளனர்.
 
இன்றைய விசாரணையில் எடப்பாடி, தினகரன் மற்றும் தீபா மூன்று பேர் தரப்பிலும் விவாதங்கள நடைபெறும். அதைத் தொடர்ந்து, இரட்டை இலை யாருக்கு என தேர்தல் கமிஷன் அறிவிக்கும். அந்த அறிவிப்பு இன்றே வருமா அல்லது சில நாட்கள் கழித்து அறிவிக்கப்படுமா என்பது இன்று மாலை தெரிய வரும்.