’எவனென்று நினைத்தாய்’ திரைப்படம் குறித்து ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை!

’எவனென்று நினைத்தாய்’ திரைப்படம் குறித்து ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை!
siva| Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (19:25 IST)
’எவனென்று நினைத்தாய்’ திரைப்படம் குறித்து ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கை!
லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் ‘எவனென்று நினைத்தாய்’ என்று வெளியான செய்தியை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்திய சினிமாவின்‌ விஸ்வரூப நாயகனுடன்‌, மாஸ்டர்‌ , கைதி போன்ற வெற்றிகரமான படங்களை, தன்னுடைய குறுகிய கால திரைப்பயணத்தில்‌ சாதித்திருக்கும்‌ இளம்‌ திறமையாளர்‌, கரம்‌ கோர்க்கும்‌ போது, திரையில்‌ வரப்போவது திரைப்படம்‌ அல்ல. சினிமா ரசிகர்களுக்கான கொண்டாட்டம்‌.

இக்கட்டான இந்த நேரத்தில்‌ கனவுகளை நோக்கி பயணிப்பது பெரும்‌ சவாலாக இருக்கும்‌ போது, மக்களின்‌ மனநிலையை மகிழ்ச்சியாக்கும்‌, கொண்டாட்டமாய்‌ மாற்றும்‌ குறிக்கோளுடன்‌ வேலைகள்‌ வேகமெடுக்கிறது. சிகரம்‌ தொட்ட சாதனையாளரின்‌ திறமையும்‌, இன்னும்‌ பல வெற்றிகளை சாதிக்கத்‌ துடிக்கும்‌ இளமையும்‌ இணையும்‌ இந்த பிரம்மாண்ட முயற்சி, நிச்சயம்‌ உங்களைக்‌ குதூகலிக்கச்‌ செய்யும்‌.
சினிமா ரசிகர்களுக்கான 2021 ஆம்‌ ஆண்டின்‌ மிகப்பெரும்‌ திருவிழாவை உங்களிடம்‌ கொண்டு வந்து சேர்ப்பதில்‌ பெருமை கொள்கிறது ராஜ்கமல்‌ பிலிம்ஸ்‌ (6) நிறுவனம்‌. கலை ஞானி, உலக நாயகன்‌ கமல்‌ஹாசன்‌ நடிப்பில்‌ , வெற்றிகரமான இளம்‌ இயக்குநர்‌ லோகேஷ்‌ கனகராஜ்‌ இயக்கத்தில்‌, அனிருத்‌ இசையில்‌ திரையரங்குகளை கோலாகல திருவிழாவாக்கிட தயாராகி வருகிறது கமல்ஹாசன் 232 என்று தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்த படைப்பு.
ராஜ்கமல்‌ பிலிம்ஸ்‌ நிறுவனம்‌ தமிழ்‌ சினிமாவில்‌ 40 ஆண்டுகளாக சினிமாவின்‌ கலையையும்‌, திறனையும்‌, தொழில்நுட்பத்தையும்‌, வணிகத்தையும்‌ தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச்‌ சென்று கொண்டிருக்கும்‌ பாரம்பரியம்‌ கொண்ட நிறுவனம்‌. 1981 ஆம்‌ ஆண்டு ராஜபார்வை' உடன்‌ தன்‌ பயணத்தை தொடங்கி அபூர்வ சகோதரர்கள்‌ மூலம்‌ அதிசயிக்க வைத்து, இன்றைய தலைமுறையும்‌ கொண்டாடும்‌ சத்யா, தேவர்மகன்‌, குருதிப்புனல்‌, இந்திய சினிமாவின்‌ சரித்திரத்தில்‌ மைல்கல்‌ முயற்சியான ஹே ராம்‌, விருமாண்டி, விஸ்வரூபம்‌, வயிறு குலுங்க சிரிக்க வைத்திடும்‌ சதிலீலாவதி என தமிழ்‌ சினிமா வரலாற்றில்‌ நீங்கா இடம்‌ பிடித்த திரைப்படங்களுடன்‌ தன்‌ பயணத்தை தொடர்கிறது. தமிழ்‌ சினிமாவை, இந்திய சினிமா தாண்டி உலக சினிமா தரத்திற்கு கொண்டு சென்றிடும்‌ தன்‌ முயற்சியில்‌ புதிய தொழில்‌ நுட்பங்களான டால்பி ஸ்டிரியோ சவுண்ட் குருதிப்புனல்‌ திரைப்படத்திலும்‌, திரைக்கதை எழுதும்‌ மென்பொருளை மருதநாயகம்‌ திரைப்படத்திலும்‌, ஆரோ 3டி தொழில்‌நுட்பத்தை விஸ்வரூபம்‌ திரைப்படத்திலும்‌ தமிழ்‌ சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சினிமாவைக்‌ கொண்டாடி, ரசிகர்கள்‌ கொண்டாடும்‌ சினிமாவை தயார்‌ செய்யும்‌ ராஜ்கமல்‌ நிறுவனத்தின்‌ அடுத்த படைப்பு இது.
பத்ம பூஷன்‌ டாக்டர்‌ கமல்‌ ஹாசன்‌ : தமிழ்‌ திரையுலக வரலாற்றின்‌ நிகரில்லா கலைஞன்‌, நான்கு தலைமுறையாக இந்திய சினிமாவை தன்‌ தோள்களில்‌ தூக்கிச்‌ செல்லும்‌ கலை ஞானி. தன்‌ நான்காவது வயதில்‌ களத்தூர்‌ கண்ணம்மாவில்‌ அறிமுகமாகி, முதல்‌ படத்திலேயே நடிப்பிற்கு தேசிய விருது பெற்ற மகாநடிகன்‌. தமிழகம்‌, இந்தியா தாண்டியது இவர்‌ சாதனைகளின்‌ உச்சம்‌. உலக சினிமா கண்டிராத கனவுகளைதன்‌ 61 ஆண்டு கால திரைப்பயணத்தில்‌ சாத்தியப்படுத்தியிருக்கும் பெருங்கலைஞன்‌. தனக்கென பாதை அமைத்து, அதை ராஜபாட்டையாக மாற்றிக்‌ காட்டிய நம்பிக்கை நாயகன்‌. ரசிகர்கள்‌ கொண்டாடும்‌ உலக
நாயகன்‌ கமல்‌ ஹாசனின்‌ 232வது திரைப்படம்‌ இது.

லோகேஷ்‌ கனகராஜ்‌ : மாஸ்டர்‌, கைதி, மாநகரம்‌ என வெற்றிப்படங்களை துவக்கமாய்‌ வைத்து முன்‌ வந்திருக்கும்‌ இயக்குநர்‌ லோகேஷ்‌ கனகராஜ்‌, தன்‌ வண்ணக்‌ கனவை, எழுத்தாக்கினால்‌, அதை படமாக்கி, தியேட்டர்களை திருவிழாவாக்க முடியும்‌ என சாதித்து காண்பித்து இருக்கும்‌ இளம்‌ திறமையாளர்‌. தான்‌ இயக்கிய மூன்று படங்களிலேயே தமிழ்‌ சினிமாவின்‌ நாளைய பக்கத்தில்‌ தனக்கென தனி இடத்தை பிடித்துவைத்திருக்கும்‌ கலைக்கு சொந்தக்காரர்‌. உலக நாயகனின்‌ தீவிர விசிறியான இவர்‌, தன்‌ ஆதர்ச நாயகனைப்‌ போலவே சினிமாவின்‌ மீதான காதலுக்காக சிரமமோ, நேரமோ பாராமல்‌ தன்‌ சினிமாவை செதுக்கிடும்‌ கலைக்காதலர்‌. திரையில்‌ தான்‌ கொண்டாடிய உலக நாயகனுடன்‌, தன்‌ நான்காவது திரைப்படத்தில்‌ கைகோர்த்து 2021 ஆம்‌ ஆண்டின்‌ மிகப்பெரும்‌ திருவிழாவை படைத்திட தயாராகி வருகிறார்
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :