1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 மார்ச் 2018 (20:29 IST)

காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க விமானப்படை: அமைச்சர் நிர்மலா சீதாரமன் உத்தரவு

தேனி அருகே காட்டுத்தீயில் டிரெக்கிங் சென்ற மாணவிகள் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த மாணவிகளை மீட்க விமானப்படைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ட்ரெக்கிங் சென்ற சுமார் 40-க்கும் மேற்பட்ட கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள்  திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். இதில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாகவும் ஐந்து மாணவிகளுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாணவிகளை மீட்கும் வகையில் தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் தேனி மாவட்ட ஆட்சியரும் விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் காட்டுத்தீ குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தீயில் சிக்கியவர்களை மீட்குமாறு விமானப்படைக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணையிட்டுள்ளார். மேலும் அவர் தேனி ஆட்சியருடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணியில் விமானப்படையினர்களுக்கு உதவுமாறும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கோரிக்கையை ஏற்றே விமானப்படை தெற்கு கமாண்ட் பிரிவுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளதாக  அவர் தனது  டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.