புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (14:25 IST)

இனி மின்சாரம் போல தண்ணீருக்கும் டிஜிட்டல் மீட்டர் கட்டணம்!? – சென்னை குடிநீர் வாரியம்

சென்னை போன்ற பெரு நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்திருக்கும் சூழலில் தண்ணீர் உபயோகத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் நடைமுறைய உழுவதுமாக அமல்ப்படுத்த சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

தற்போது மின்சாரத்திற்கு உபயோக அளவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தும் முறை இருந்து வருகிறது. ஆனால் குடிநீருக்கு அப்படிப்பட்ட முறை இல்லாமல் இருந்தது. எவ்வளவு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ தண்ணீரை உபயோகித்தாலும் கூட ஒரே கட்டணம்தான். இந்நிலையில் சாதாரண குடியிருப்புகள் தவிர்த்து அடுக்குமாடி கட்டிடங்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு மீட்டர்கள் பொருத்தப்பட்டன. ஆனாலும் மீட்டர்கள் பல சமயம் பழுதடைந்து விடுவதாலும், சரியான கணக்கீடை செய்யாமல் போவதாலும் குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

தற்போது டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தி துல்லியமாக நீர் உபயோக அளவை கணக்கிட்டு அதன் மூலம் கட்டணத்தை நிர்ணயிக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. முதலில் சென்னையில் வணிக ரீதியாக இயங்கும் கட்டிடங்களுக்கு இதை அமல்படுத்த இருப்பதாகவும், பிறகு சென்னையில் குடிநீர் இணைப்பு உள்ள அனைத்து வீடுகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நீர் செலவு செய்வதற்கேற்ப மக்கள் பணம் செலுத்தினால் போதுமானது மற்றும் மக்களிடையே நீர் மேலாண்மையில் விழிப்புணர்வும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே கோயம்புத்தூர் பகுதிகளில் கடுமையான நீர் தட்டுபாடு ஏற்பட்ட சமயம் மீட்டர் முறையில் தண்ணீர் வரி வசூலிக்கும் முறையை செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.