வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (17:44 IST)

விக்கிரவாண்டி உங்களுக்கு, நாங்குநேரி எங்களுக்கு! – காங்கிரஸின் கிரேட் டீல்!

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், யார் போட்டியிடுவது என்று திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் யார் போட்டியிடுவது என்று காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே விவாதம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. வேலூர் மக்களவை தேர்தலுக்கு முன்னரே திருச்சியில் பிரச்சார கூட்டமொன்றில் பேசிய உதயநிதி “திமுக தனித்து நின்று தேர்தலை சந்திக்கும்” என்று பேசினார். இது காங்கிரஸாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் திமுகவுடன் கூட்டணியில் உள்ள வைகோ, காங்கிரஸை கூட்டணி கட்சியென்றும் பாராமல் ராஜ்யசபாவிலே விமர்சித்து பேசியதால் ம.தி.மு.க- காங்கிரஸ் இடையே சச்சரவு உண்டானது. அப்போதும் திமுக அதில் பெரிதாக தலையிட்டுக் கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நாங்குநேரியில் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி “கூட்டணி இல்லாமல் நாம் வெற்றி பெறவே முடியாதா? ஒரு தொகுதியில் இல்லாவிட்டாலும் ஒரு தெருவிலாவது வெற்றி பெற முடியுமா?” என காங்கிரஸ் தொண்டர்களிடம் ஆவேசமாக பேசியுள்ளார். இதனால் இடைத்தேர்தலை இரு கட்சிகளும் தனித்து சந்திக்கும் என பேசப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி “கூட்டணியில் உள்ள கட்சிகள் எப்படி ஒரே தொகுதியி ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிட முடியும். இரண்டு தொகுதிகளிலும் கட்சிக்கு ஒன்று என்று தேர்வு செய்ய வேண்டியுள்ளது. இப்போதைக்கு நாங்குநேரியில் காங்கிரஸும், விக்கிரவாண்டியில் தி.மு.கவும் போட்டியிடலாம் என எதிபார்க்கப்படுகிறது. திமுக மற்றும் மற்ற கூட்டணி கட்சிகள் உடனான சந்திப்புக்கு பிறகே எதையும் உறுதியாக கூற முடியும்” என கூறியிருக்கிறார்.

எனவே, தற்போது இடைத்தேர்தல் தொகுதி பங்கீடில் காங்கிரஸ் ஒரு முடிவுக்கு வந்திருப்பது தெளிவாகிறது. ஆனால் கூட்டணி கட்சிகளின் நிலைபாடு என்ன என்பது குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு பிறகே தெரியவரும் என கூறப்படுகிறது.