போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்: பேருந்துகள் இயங்க தொடங்கின
ஜூன் மாத சம்பளம் தரப்படாததால், சென்னையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுனர்கள், தற்போது தங்களது போராட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், அந்த மாதத்தின் இறுதியில் சம்பளம் போடப்படும். ஆனால் ஜூன் மாதத்திற்குரிய சம்பளம் பலருக்கு தற்போது வரை வழங்கப்படவில்லை.
மேலும் மொத்த சம்பளத்தில் 62% தான் தற்போது தரப்படும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர். ஆதலால் தங்களுக்கு சம்பளம் பாக்கி இல்லாமல் 100% சம்பளம் உடனே தரப்படவேண்டும் என்று, இன்று காலை சென்னையில் பல பேருந்து ஊழியர்கள் பேருந்தை இயக்க மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் கணேஷ், இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து தற்போது போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. மேலும் தற்போது சென்னையில் பல பகுதிகளில் பேருந்துகள் இயங்க ஆரம்பித்திருக்கின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை,போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், சென்னையில் மக்கள் அலுவலகத்திற்கும், மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கும் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.