செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. எம். முருகன்
Written By எம். முருகன்
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (13:43 IST)

ஒரே கல்லில் நான்கு மாங்காய் அடித்த எடப்பாடி - இனி என்ன நடக்கும்?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்த இரு அறிவிப்புகளின் பின்னால் ஏராளமான அரசியல் புதைந்திருக்கிறது நன்றாகவே தெரிகிறது.


 

 
நேற்று செய்தியாளர்கள் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் மற்றும் ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என இரு அறிவிப்புகளை அறிவித்தார். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 
 
இதற்கு பின்னால் உள்ள அரசியலை உற்று நோக்கினால் அதில் பல விவகாரங்கள் புதைந்து கிடப்பது நமக்கு புரிய வரும். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ் அணி, எடப்பாடி அணியோடு இணைவதற்கு இரு முக்கிய கோரிக்கை வைத்தது. அது, சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும், ஜெ.வின் மரணத்திற்கு விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்பதுதான் இரு முக்கிய கோரிக்கை. அடுத்து, ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வீடு மக்கள் வந்து போகும் நினைவிடமாக மாற்றப்பட வேண்டும் என்பது. ஏறக்குறைய இவை அனைத்தும்  நிறைவேற்றப்பட்டுள்ளன. 


 

 

 
எனவே, ஒ.பி.எஸ் அணி தங்களுடன் வந்து இணைந்து விடுவார்கள் என நம்புகிறது எடப்பாடி அணி. அதேபோல், இது பாஜகவின் டாஸ்க்கும் கூட. இரு அணிகளையும் இணைத்து, இரட்டை இலையை கொடுத்து, அதிமுகவை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, குறைந்தது தமிழகத்தில் 15 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். அதற்கு இரு அணிகளும் இணைவது முக்கியம். எனவே இந்த அறிவிப்புகளை அறிவித்துள்ளார் எடப்பாடி. 
 
மேலும், அதிமுக தொண்டர்களை பொறுத்த வரை, போயஸ்கார்டன் மற்றும் தலைமை அலுவலகம் ஆகிய இரண்டும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்கள்தான் அதிமுக தலைமையாக கருதப்படுவார்கள். தற்போது அவை இரண்டும் எடப்பாடி அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதன் மூலம் சசிகலாவிற்கு செக் வைக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, சமீபத்தில் மதுரை மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தி கெத்து காட்டிய தினகரனுக்கும் செக் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இரு அணிகளும் இணைந்துவிட்டால், அதிமுக வலிமை பெற்றுவிடும். தினகரன் ஓரங்கட்டப்படுவார். 


 

 
இப்படி ஓ.பி.எஸ் மற்றும் பாஜகவை திருப்தி படுத்தியதோடு, தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கும் செக் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
 
ஆனால், தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி அணி சமர்பித்துள்ள பிரமாண பத்திரத்தை வாபஸ் வாங்கினால் மட்டுமே தினகரன் மற்றும் சசிகலாவை நீக்கியதாக கருதப்படும். மேலும், ஜெ.வின் மரணம் குறித்து சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியாகும் என ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடியின் அறிவிப்பை தொடர்ந்து இதுபற்றி சசிகலாவிடம் ஆலோசிக்க இன்று பெங்களூர் சிறைக்கு சென்றுள்ளார் தினகரன்.
 
எனவே, எடப்பாடி மற்றும் பாஜகவின் திட்டம் பலிக்குமா? எடப்படி அணியுடன் ஓபிஎஸ் அணி இணையுமா? சசிகலா மற்றும் தினகரனின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் என்ன என்பதையெல்லாம் அறிய அதிமுக தொண்டர்களும், அரசியல் விமர்சகளும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.