சித்திரை விழாவிற்காக சர்க்கரைப் பொங்கல் செய்து சலித்தவர்களுக்காக பாஸந்தி செய்யும் முறையை சொல்கிறோம். செய்து பார்த்துவிட்டு உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
பால் - 1/2 லிட்டர் சர்க்கரை - 100 கிராம் குங்குமப்பூ - சிறிது பச்சைக்கற்பூரம் - சிறிதளவு ஏலக்காய் - 4 (சர்க்கரை வைத்து பொடித்துக் கொள்ளவும்) தேவைப்பட்டால் வாதுமைப் பருப்பு - சிறிது சாரைப் பருப்பு - சிறிது பிஸ்தா பருப்பு - சிறிது நெய் - தேவையான அளவு
செய்யும் முறை
கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பின் மீது குறைந்த தீயில் காய்ச்சவும்.
பால் மீது படியும் பாலாடையை அவ்வப்போது சுத்தமான கரண்டியைக் கொண்டு மேலிருந்து அகற்றி வேறு பாத்திரத்தில் சேமிக்கவும்.
பால் பாதி சுண்டியதும் தனியாக சேகரித்து வைத்த பாலாடையை மீண்டும் பாலிலேயேக் கொட்டி, சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பிறகு, கீழே இறக்கி வைத்துத் தயாராக இருக்கும் குங்குமப்பூ, ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்க்கவும்.
வாதுமை, பிஸ்தா, சாரைப் பருப்புகளை நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
வாதுமை, பிஸ்தா பருப்புகளின் தோலை நீக்கிக் கொள்ளவும். சாரைப் பருப்பில் இருந்து தூசுகளை நீக்கிச் சுத்தம் செய்யவும். சுத்தப்படுத்தி வைத்துள்ள பாதாம், வாதுமை, சாரைப் போன்ற பருப்புகளை நெய்யில் வறுத்து பாலுடன் போடவும்.
சுவையான பாஸந்தி தயார். உங்களுக்கு ஏற்ற வகையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்ந்தோ அல்லது சூடாகவோ பரிமாறலாம்.
|