‘இந்தியன் 2’ எப்போ ஸ்டார்ட் பண்ணப் போறாங்கனு தெரியுமா?


Cauveri Manickam (Suga)| Last Modified ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (11:55 IST)
‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ஸ்டார்ட் ஆகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

 
 
ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன்’. 1996ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் கமல். அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்திருந்தனர். மேலும், கஸ்தூரி, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரும் நடித்திருந்தனர்.
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனலில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தை ஷங்கர் இயக்க, கமல் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம், மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
 
சரி, இந்தப் படம் எப்போது தொடங்கும்? ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனில் தற்போது பிஸியாக இருக்கிறார் ஷங்கர். ஜனவரி மாத இறுதியில் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை தள்ளிப் போகலாம் என்றும் சொல்கிறார்கள். எனவே, அந்தப் படம் ரிலீஸான பிறகே ஷங்கரால் ஃப்ரீயாக முடியும்.
 
இந்தப் பக்கம் கமல் கைவசம் இரண்டு படங்கள் இருக்கின்றன. ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும்; ‘சபாஷ் நாயுடு’ படத்தின் மீதமுள்ள ஷூட்டிங்கை முடித்து, அதையும் ரிலீஸ் செய்ய வேண்டும். அதன்பிறகே ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பார் என்கிறார்கள். இவர்கள் சொல்வதைப் பார்த்தால், அடுத்த வருட இறுதியில்தான் ஷூட்டிங்கே தொடங்கும் போல...


இதில் மேலும் படிக்கவும் :