Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எம்.ஜி.ஆர் சிலை திறப்பு - அதிமுக ஓட்டுகளை குறி வைக்கும் ரஜினி?

Last Modified செவ்வாய், 6 மார்ச் 2018 (10:56 IST)
சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் நடிகரும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் உருவ சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

 
அரசியலுக்கு வருவதாய் அறிவித்து விட்ட ரஜினி அதற்கான வேலைகளில் மூழ்கி இருக்கிறார். ரசிகர்கள் சந்திப்பு, மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமிப்பது என வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்நிலையில்தான், அவரின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த அவரின் ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை  கொடுத்தது.
 
அந்நிலையில்தான், சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் ஆராய்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை ரஜினிகாந்த் நேற்று மாலை திறந்து வைத்தார். அவரது நண்பர் ஏ.சி.சண்முகம் வற்புறுத்தியதால்தான் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ள ஒத்துக்கொண்டாலும், தான் அரசியலில் இருப்பதை அவரின் ரசிகர்களுக்கு மறைமுகமாக ரஜினி கூறியிருக்கிறார்.
 
அதோடு, அந்த விழாவில் எம்.ஜி.ஆர் பற்றி அவர் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார். தனக்கு லதாவுடன் திருமணமாவதற்கு காரணமாக இருந்தது, தன்னுடைய திருமண மண்டபத்திற்கு அனுமதி  பெற்றுக் கொடுத்தது அனைத்துமே எம்.ஜி.ஆர் தான் என பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும், எம்.ஜி.ஆர் ஒரு தெய்வப்பிறவி. அவர் போல் இன்னொருவர் பிறக்க முடியாது. அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இன்னொரு எம்.ஜி.ஆர் உருவாக  முடியாது எனப் பேசினார். இதன் மூலம் எம்.ஜி.ஆரின் அபிமானிகளை அவர் கவந்துள்ளார். அதேபோல், எம்.ஜி.ஆரைப் போல் ஆக முடியாவிட்டாலும், அவரின் ஆட்சியை தன்னால் கொடுக்க முடியும் என உறுதியாக கூறினார்.
 
அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டவும் அவர் தயங்கவில்லை. ஜெ.வைப் போல் கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தலைவர் யாருமில்லை எனக் கூறினார். ஆனால், கருணாநிதியின் உடல் நிலை மற்றும் ஜெ.வின் மறைவிற்கு பின் இங்கே ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது உண்மைதான். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என வெளிப்படையாக பேசி அனைவரையும் கவர்ந்தார்.
 
அதிமுகவினர் தெய்வமாக வணங்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை ரஜினிகாந்த் மனமுவந்து வெளிப்படையாக பாராட்டியுள்ளார். இதன் மூலம், தற்போது தலைமை மீது அதிருப்தி கொண்டிருக்கும் அதிமுக விசுவாசிகள் மற்றும் தொண்டர்களின் பார்வை ரஜினி மீது திரும்பும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :