ஃபிஷ் ரோல் செய்ய தெரியுமா...?
தேவையான பொருட்கள்:
மைதா சப்பாத்தி - 4
மீன் - 500 கிராம்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
எலுமிச்சைபழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 3
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் குடைமிளகாய், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு பாதி வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மீனை உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.
பிறகு உதிர்த்த அந்த மீனில் அரைத்த வெங்காயம், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, அதில் மீதமுள்ள நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் மற்றம் பச்சை மிளகாய் சேர்த்து, தீயை குறைவாக வைத்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பின் அதில் மீதமுள்ள இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, மறுபடியும் 1-2 நிமிடம் வதக்கவும். வதக்கியதும் அதில் ஊற வைத்த மீனை சேர்த்து, நன்கு பிரட்டி மீனானது வெந்தவுடன், அதில் நறுக்கிய கொத்தமல்லியை தூவி சிறிது நேரம் கிளறி, பின் அதனை இறக்கி வைக்கவும். பின் அந்த கலவையை சப்பாத்தியில் தடவி, சுருட்டி வைத்தால், சுவையான ஃபிஷ் ரோல் தயார்.