ஐடி ரெய்ட் பின்னணியில் ரஜினிகாந்த்: பகீர் கிளப்பும் முக்கிய புள்ளி
தமிழகத்தில் ஐடி ரெய்ட் நடப்பது போல, கர்நாடகாவிலும் ரெய்ட் நடந்து வருகிறது. அங்கு சி.எஸ்.சி.எஸ்.புட்டராஜு வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு தொடர்புள்ளதகா பரபரப்பு தகவல் ஒன்று வெளியியாகியுள்ளது.
மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் சார்பில் அவருக்கு சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாண்டியாவில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் மந்திரி சி.எஸ்.புட்டராஜுவுக்கு சீட் கொடுக்கப்பட்டது.
புட்டராஜு வீடு, அவரது சகோதரரின் மகன்கள் வீட்டில், மந்திரி எச்.டி. ரேவண்ணாவின் நெருங்கிய ஒப்பந்ததாரர்களின் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பின்னர் புட்டராஜு பின்வருமாறு பேட்டியளித்தார்,
வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய 3 குழுவினர் எனது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் பின்னணியில் 100% பாஜக உள்ளது. சுமலதா அவரது குடும்ப நண்பர் ரஜினிகாந்த் உதவியுடன் பாஜக தலைவர் அமித்ஷாவை தொடர்புகொண்டு எனது வீட்டில் சோதனை நடத்த கேட்டுக்கொண்டுள்ளார். எனவே என் வீட்டில் நடந்த சோதனையில் ரஜினிகாந்துக்கும் தொடர்பு உள்ளது என கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
ஏற்கனவே, சுமலதாவிற்கு ஆதரவாக பிரபல கன்னட நடிகர்களான கேஜிஎஃப் புகழ் யஷ் மற்றும் தர்ஷன் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இந்நிலையில், அம்பரீஷின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், அதை பின்னர் சுமலதாவே மறுத்துவிட்டார்.