1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 நவம்பர் 2024 (13:34 IST)

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் காவிரி வடிநிலப் பகுதிகளை (டெல்டா) பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

 

 

தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெட்ரோலியம், எரிவாயு, ஹைட்ரோ கார்பன்கள் இருக்கிறதா எனச் சோதனை செய்வது, அவற்றை எடுப்பது தொடர்பாக ஆய்வுகளை நடத்துவது ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தில் 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது.

 

அதன்படி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

 

சமீபத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, தங்கள் சட்டத்தின் கீழ் அப்படி எந்த அறிவிப்பையும் செய்யவில்லையென மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசின் அனுமதி தேவையா என்பது குறித்த சில கேள்விகள் - பதில்கள்.

 

கேள்வி: காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் பிரச்னையின் பின்னணி என்ன?

 

பதில்: காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய், எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோகார்பன்கள் எடுக்கும் விவகாரம் என்பது நீண்ட காலமாகவே விவசாயிகளின் எதிர்ப்பிற்குரிய விஷயமாக இருந்துவருகிறது.

 

இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 31 இடங்களில் நீர்ம கரிம எரிவாயு (ஹைட்ரோ கார்பன்) சோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் பகுதியும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன.

 

அதேபோல, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் கடந்த 2017- ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 2017-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி முதல் பொதுமக்கள் அப்பகுதியிலும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.

 

இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாத மத்தியில் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளில், எண்ணெய் துரப்பண ஆய்வுகள் "A" பிரிவிலிருந்து "B"க்கு மாற்றப்பட்டும் எனக் கூறப்பட்டது.

 

அதன்படி, கடலிலும் நிலத்திலும் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகளுக்கு என பொதுமக்கள் கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டியதில்லை. இதையடுத்து, டெல்டா பகுதியில் மீண்டும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன.

 

இந்த நிலையில், டெல்டா பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி இதற்கான மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

அந்த அறிவிப்பின்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்களும் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருவதாக அறிவிக்கப்பட்டது.

 

அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களும் கடலூர் மாவட்டத்திலிருந்து காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களும் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இடம்பெற்றன.

 

கேள்வி: இந்த சட்டத்தின் மூலம் என்ன பாதுகாப்பு கிடைத்தது?

 

பதில்: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

 

துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படும். ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்படும்.

 

விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப்பகுதிகளில் தொடங்க அனுமதி கிடையாது. சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தடைசெய்யப்பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும்.

 

இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதிகளில் மேலே சொன்ன தொழில்களைத் துவங்கி நடத்தினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

 

துறைமுகம், குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்பு, மின்சாரம், நீர் விநியோகம் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளை இதன் கீழ் தடைசெய்ய முடியாது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை இந்தச் சட்டம் பாதிக்காது.

 

கேள்வி: இப்போது எழுந்துள்ள சர்ச்சை என்ன?

 

பதில்: தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்திடம் எழுத்து மூலமாக பின்வரும் கேள்விகளை எழுப்பியிருந்தார்:

 

1. காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது?

 

2. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹைட்ரோ கார்பன், எரிவாயு துரப்பணத்திற்காக சூழல் அனுமதி அல்லது தடையில்லாச் சான்றிதழ் கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விவரம் என்ன? அனுமதி கோரப்பட்ட இடங்கள், நிறுவனங்களின் விவரங்களையும் தரவும்.

 

3. டெல்டா மாவட்டங்கள் மாநில அரசால் சிறப்பு விவசாய மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருப்பதால், அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, எண்ணெய், எரிவாயு துரப்பணத் திட்டங்களைத் தடுக்க மத்திய அளவிலான கொள்கை ஏதும் உள்ளதா?

 

இதற்கு மத்திய அமைச்சகம் பின்வரும் பதில்களை அளித்தது:

 

"1. மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. மூன்று திட்டங்களுக்கு ஏற்கனவே பெறப்பட்டிருந்த சூழல் அனுமதி மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

2. கடந்த ஐந்து ஆண்டுகளில் பின்வரும் நிறுவனங்கள் சூழல் அனுமதி கோரிய திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வுக்காக 20 கிணறுகளைத் தோண்ட ONGC அளித்த விண்ணப்பம்.
 

நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் துரப்பணத்திற்காக Cairn Oil & Gas நிறுவனத்தின் மூலம் வேதாந்தா அளித்த விண்ணப்பம்.

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் துரப்பணத்திற்காக Cairn Oil & Gas நிறுவனத்தின் மூலம் வேதாந்தா அளித்த விண்ணப்பம் ஆகியவை நிலுவையில் உள்ளன.
 

3. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் சில பகுதிகளின் சிறப்புப் பாதுகாப்பிற்காக அந்தப் பகுதிகளை Eco Sensitive Zone (ESZ)/ Eco-Sensitive Area (ESA) என அறிவிக்கிறது. தமிழ்நாடு அரசிடமிருந்து இந்த அமைச்சகத்திற்கு அப்படி எந்தக் கோரிக்கையும் வரவில்லை. மேலும், எண்ணெய்வயல், எரிவாயு துரப்பணச் சட்டம் மற்றும் விதிகளில் இப்படி அறிவிக்க எந்த விதிமுறையும் இல்லை".

 

2020-ஆம் ஆண்டில் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மாநில அரசு சட்டம் இயற்றியிருக்கிறது; ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் செய்யவில்லையென மத்திய அரசு கூறியிருப்பதால் காவிரி டெல்டா பகுதிகள் உண்மையிலேயே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களா என சர்ச்சை எழுந்தது.

 

கேள்வி: ஆகவே, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அனுமதிக்கப்பட்டது செல்லாதா?

 

பதில்: அப்படியல்ல என்கிறார்கள் நிபுணர்கள். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாநில அரசு தனது சட்டத்தின் மூலமாக அறிவித்தது. மத்திய அரசு தெரிவித்துள்ள EcoSensitive Zone (ESZ )/ Eco-Sensitive Area (ESA) என்பது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, மலை பகுதிகளை பாதுகாக்க அளிக்கப்படும் அறிவிப்பு. டெல்டா பகுதியில் உள்ள விவசாயத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் இதுபோன்ற அறிவிப்பு தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

 

இது குறித்து பேசிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேதுராமன், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னணியை முதலில் பார்க்கலாம். மத்திய அரசானது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான சட்டத்தை 2020ல் திருத்த முடிவுசெய்தது. ஆனால், இந்தச் சட்டம் திருத்தப்படவில்லை ''என்றார்

 

மேலும் அவர், ''மாறாக சில பகுதிகள் மட்டும் அரசிதழின் மூலம் அறிவிப்பாக வெளியிடப்பட்டன. அதன்படி, எண்ணெய், எரிவாயு போன்றவை இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்யும் பணிகள், A பிரிவிலிருந்து B பிரிவுக்கு மாற்றப்படும். A பிரிவில் உள்ள திட்டத்திற்கு பொதுமக்களின் கருத்தைப் பெற வேண்டும். B பிரிவில் உள்ள திட்டங்களுக்கு பொது மக்களின் கருத்தைக் கேட்கத்தேவையில்லை. ஆனால், சூழல் அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்தான் வழங்கவேண்டும்'' என்கிறார்

 

''இந்த நிலையில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் இயற்றப்பட்டது. ஆகவே, புதிதாக அனுமதி கோரி விண்ணப்பங்கள் வந்தால் மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ள பகுதிகளில் புதிய திட்டங்களுக்கு மாநில சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்காது.

 

கடந்த ஐந்தாண்டுகளாக புதிதாக எந்தத் திட்டத்திற்கும் மாநில அரசு சூழல் அனுமதியும் வழங்கவில்லை. ஆகவே, வேளாண் மண்டலத்தைப் பாதுகாக்க மாநில அரசின் சட்டமே போதுமானது. மத்திய அரசின் ESZ ஒரு பகுதியில் அறிவிக்கப்பட்டால் ஒரு சின்ன மேம்பாட்டுத் திட்டத்தை, குறிப்பாக புதிதாக ரோடு போடுவது போன்ற திட்டங்களைக்கூட செயல்படுத்த முடியாது. மாநில அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம், மத்திய அரசின் ஆளுநரின் அனுமதியைப் பெற்றச் சட்டம்தான். ஆகவே, மத்திய அரசு புதிதாக ஏதும் செய்யத் தேவையில்லை" என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேதுராமன்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.