அமெரிக்காவை எச்சரிக்க ஜப்பானை அலறவிட்ட வடகொரியா
வடகொரியா இன்று காலை நடத்திய ஏவுகணை சோதனையில், ஏவுகணை ஜப்பான் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்ட பின்னும் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எற்கனவே அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. அது மூன்றாம் உலக போர் ஏற்பட வழிவகுக்கும் என மற்ற நாடுகள் சமரசம் பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ என்ற பகுதியின் மேல் பறந்தது. ஜப்பான் பகுதியில் சுமார் 14 நிமிடங்கள் பறந்துள்ளது. இதனால் ஜப்பான் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜப்பான் கடல் பகுதியில் இருந்து 1,180 கி.மீ தூரம் கடந்து பசபிக் பெருங்கடலில் விழுந்தது. இதையடுத்து ஜப்பான் பகுதியில் ஏவுகணை பறந்ததால் அந்நாட்டு பிரதமர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியா, இந்த சோதனை மூலம் அமெரிக்காவை எளிதாக தாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், வடகொரியா ஒவ்வொரு அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.