1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (11:50 IST)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலக்கம் - விரைவில் அணி மாற்றம்?

ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விரைவில் எடப்பாடி பக்கம் தாவுவார்கள் எனக் கூறப்படுகிறது.


 

 
அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கி விட்டு, கட்சி மற்றும் ஆட்சியை தங்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர நினைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, சில மாதங்களுக்கு முன்பு தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.  
 
அதோடு, கட்சியின் அனைத்து முக்கிய அதிகாரங்களும், ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோருக்கு வழங்கி ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. அதேபோல், இனிமேல் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டு விட்டது.


 

 
இந்த கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க தினகரன் தரப்பு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தது. பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்தாலும், சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே, செயற்குழு மற்றும் பொதுக்குழுவை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் வெற்றிகரமாக  நடத்தி முடித்துள்ளனர். 
 
அதோடு, சசிகலாவையே நீக்கிவிட்டதால், தினகரனின் ஆதிக்கம் முடிவிற்கு வந்துவிட்டது. எடப்பாடி பக்கம் தன்னுடைய ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடப்பாடிக்கு எதிராக பொதுக்குழுவில் போர்க்கொடி தூக்குவார்கள் என தினகரன் கூறி வந்தார். ஆனால், அப்படி எதுவும் அங்கு நடக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், தினகரனின் ஆதரவாளர்களில் முக்கியமானவரான தளவாய் சுந்தரம் கூட அமைதியாக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு சென்று விட்டார். 
 
இந்த விவகாரம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்சியில் தினகரனின் கை ஓங்கும். முக்கிய பதவிகளை பெறலாம் எனக் காத்திருந்த அவர்களுக்கு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. 


 

 
அதோடு, அவர்களின் மீது என்னென்னெ வழக்குகள் இருக்கிறது என்கிற விபரத்தை முதல்வர் தரப்பு ஆராய்ந்து வருகிறது. எனவே, விரைவில் சட்டப்படி நடவடிக்கைகள் பாயும் என மிரட்டல் தொனியை ஆளும் அரசு கையிலெடுக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இனிமேலும் தினகரனோடு இருந்தால் தங்களின் அரசியல் எதிர்காலம் வீணாகி விடும் என்கிற அச்சத்தில் உள்ள சில எம்.எல்.ஏக்கள், விரைவில் அணி மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.