இடியுடன் கூடிய கனமழை - இந்திய வானிலை மையம் தகவல்
தென் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை, கடலூர், நாகை, திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
அந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. இன்று மாலைக்குள் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால், தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அதேபோல், கேரளா, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் தென் தமிழகத்திலும் இன்று கனமழை பெய்யும். மேலும், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.