கொரோனா தொற்றால் உயிரிழந்த நர்ஸ்: உடலை புதைக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு
கொரோனா வைரஸிடமிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக இரவு பகல் பாராமல் தனது உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிபவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். ஆனால் அந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அர்ச்சனா என்ற செவிலியர் திடீரென்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் புதைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த கிராமத்து மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
அர்ச்சனாவின் உடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் தடுத்ததால் சடலத்துடன் அவருடைய உறவினர்கள் தவித்து வருவதாகவும் இதனையடுத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தால் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது