சுயேட்சை வேட்பாளர்கள் போர்க்கொடி - வேட்பு மனு தாக்கல் செய்வாரா விஷால்?
விஷால் உள்ளிட்ட விஐபி வேட்பாளர்களை முன் கூட்டியே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என சுயேட்சை வேட்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நடிகர் விஷால் இன்று காலை சிவாஜி சிலை, காமராஜர் சிலை மற்றும் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகிய இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் இன்று மதியம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதேபோல், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் இன்று மாலைதான் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய வேட்பு மனு தாக்கல் மதியம் 3 வரை நீடிக்கும். ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் மொத்தம் 42 சுயேட்சை வேட்பாளர்கள் காத்துக்கிடக்கின்றனர். இதில் விஷாலுக்கு 1 மணியும், தீபாவிற்கு 1.30 மணியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் காத்துக்கிடக்கும் போது, விஐபி வேட்பாளர் என விஷால் உள்ளிட்ட யாரையும் முன்கூட்டியே அனுமதிக்கக்கூடாது. பதிவு செய்ததன் அடிப்படையிலேயே அனுமதிக்க வேண்டும் என அங்குள்ள சுயேட்சை வேட்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே, விஷால், தீபா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியுமா அல்லது நேரம் நீட்டிக்கப்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.