1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (07:55 IST)

என்னை ஆளை விடுங்க: காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை அடுத்து அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் அக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கும்படி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் ராகுல் காந்தி, தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு வேறு ஒரு அனுபவம் வாய்ந்த தலைவரை நியமனம் செய்யவும் என்றும் கேட்டுக்கொண்டார் 
 
இந்த நிலையில் வரும் நாடாளுமன்றக் கூட்டம் முடிந்தவுடன் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் கூறின. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை பிரியங்கா காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும், காங்கிரஸ் கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை பிரியங்கா காந்தி ஏற்றுக் கொள்வார் என்றும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் 
 
ஆனால் பிரியங்கா காந்தி தன்னால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க முடியாது என்றும், கட்சித் தலைவர் பதவிக்கு தன்னுடைய பெயரை இழுக்க வேண்டாம் என்றும், தான் உத்தரபிரதேச அரசியலில் மட்டுமே முழு கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்வி தற்போது அக்கட்சியின் தொண்டர்கள் இடையே எழுந்து உள்ளது