புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (14:40 IST)

திருட்டுப்பயலே 2 - திரைவிமர்சனம்

பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் நடிப்பில் சுசி.கணேசன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் திருட்டுப்பயலே 2. ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
 
சுசி கணேசன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் திருட்டுப் பயலே. ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் நடித்திருந்த அந்த படத்தின் கதையை ஒட்டியே உருவாகியிருக்கிறது திருட்டுப் பயலே 2. 
 
பிரபலங்களின் போன்களை ஒட்டுக் கேட்கும் போலீஸ் வேலை பார்க்கிறார் பாபி சிம்ஹா. அவருடைய உயரதிகாரியின் உத்தரவுப்படி சிலருடைய போன்களை ஒட்டுக்கேட்டு, அதன்மூலம் யாருக்கும் தெரியாமல் சில கோடிகளை சுருட்டுகிறார்.
 
அவருடைய மனைவி அமலா பால் பேஸ்புக் பைத்தியம். பேஸ்புக்கில் பெண்களை வளைத்துப்போடும் பிரசன்னாவின் பிடியில், அமலா பால் சிக்குகிறார். இந்த விஷயம் பாபி சிம்ஹாவுக்கு தெரியவர, அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
 
போலீஸாகவும், யாருக்கும் தெரியாமல் பணத்தைச் சுருட்டும் கேரக்டரில் பிரமாதப்படுத்தி இருக்கிறார் பாபி சிம்ஹா. மிக இயல்பான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 
 
பாபி சிம்ஹாவுக்கு சரி சமமான கதாபாத்திரத்தில் பிரசன்னாவின் நடிப்பு ரசிக்கும்படியாகவே இருக்கிறது. பெண்கள் இவரை வளைத்துப்போடும் அளவுக்கு அழகாக இருக்கிறார் பிரசன்னா. அருமையான கேரக்டரை, அற்புதமாகச் செய்திருக்கிறார். 


 
கவர்ச்சியாகவும், அதேசமயம் தடுமாறாமலும் அழகாக நடித்திருக்கிறார் அமலா பால். காதல், கிளாமர் என வீட்டுப் பெண்ணாக அமலாபால் ரசிக்க வைக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விவேக், ரோபோ ஷங்கர் காமெடியில் கலக்கி இருக்கின்றனர். 
 
திருட்டுப் பயலே படத்தைப் போலவே இதுவும் ஒரு எரோடிக் த்ரில்லர். சுசி கணேசனின் திரைப்படங்கள் அனைத்திலும் இருக்கும் கச்சிதமான திரைக்கதை இந்தப் படத்திலும் இருக்கிறது. 
 
இடைவேளை வரை விறுவிறுப்பாக நகர்கிறது திரைப்படம். ஆனால், இடைவேளைக்குப் பிறகு, கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான மோதல், ஒரே மாதிரி தொடர்ந்துகொண்டே போவது சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் முற்பாதியில் இருந்த விறுவிறுப்பு பிற்பாதியில் சுத்தமாக கரைந்துபோகிறது.
 
வித்யாசாகர் இசையில், ஒரு பாடல் மட்டும் திரும்பத் திரும்பக் கேட்கும் ரகம். பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் அதிக பயன்பாடு, இன்றைய கணவன் - மனைவியின் நிலை என சமகால நிகழ்வுகளை மையப்படுத்திய கதையை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் சுசி.கணேசன். 
 
மொத்ததில், ஒவ்வொருவரும் திருட்டுப்பயலாகத்தான் இருக்கின்றனர் என்பதைச் சொல்கிறது இந்தப் படம்.