1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (19:51 IST)

இந்திரஜித் - திரைவிமர்சனம்

தயாரிப்பாளர் எஸ். தாணுவின் மகன் கலாபிரபு, சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் இது. கவுதம் கார்த்திக், சொனாரிகா பதோரியா, அஸ்ரிதா செட்டி, அங்கூர் சிங், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். கே.பி இசையமைத்துள்ளார்.
 
ஒரு தொன்மையான அதிசயப் பொருளை ஆய்வாளர்கள் தேடிச் செல்வது போன்ற சாகசக் கதை என்று கூறப்பட்டிருந்ததாலும் ட்ரைலர் சற்று வித்தியாசமாக இருந்ததாலும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.
 
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்துவரும் ஒரு பொருள் பூமியில் வந்து விழுகிறது. அந்தப் பொருளுக்கு காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுகிறது.
 
கோவாவில் உள்ள ஒரு வரலாற்றுப் பேராசிரியர் அந்தப் பொருளைத் தேட ஆரம்பிக்கிறார். அவரிடம் உதவியாளராக வந்துசேரும் கவுதம் கார்த்திக் அது தொடர்பான வரைபடத்தைத் தேடி எடுக்கிறார். 


 

 
அதே நேரத்தில் இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அந்தப் பொருளைத் தேடுகிறார். அந்தப் பொருள் அருணாச்சலப் பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிய, எல்லோரும் அங்கு செல்கிறார்கள்.  இறுதியில் அந்த பொருள் யாரிடம் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவுதம் கார்த்திக், தனக்கெரிய உரிய துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். படத்தில் சொனாரிகா பதோரியா, அஷ்ரிதா ஷெட்டி இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுடன் ரொமன்ஸ் செய்யும் வாய்ப்பு குறைவாக உள்ளது. 
 
இராசாமதி ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்மியமாய் காட்டபட்டுள்ளன.  கே.பி. இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை சற்று சலிப்பை தருகிறது. துவக்கத்திலிருந்தே எந்த ஒரு காட்சியும் படத்தோடு ஒன்றவைக்கவில்லை. திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பு, சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
 
ஆனாலும், ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக உருவாகியிருக்கிறது இந்திரஜித்.