மொபைல் போன் ஜாக்கிரதை - உங்கள் வங்கி பணத்தை திருட வருகிறது “ஏஜெண்ட் ஸ்மித்” வைரஸ்
இந்தியாவில் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் உபயோகிப்பவர்களில் 1 கோடியே 50 ஆயிரம் பேர் போன்களில் “ஏஜெண்ட் ஸ்மித்” என்னும் வைரஸ் பாதிப்பு இருப்பதாக செக் பாயிண்ட் என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பை வழங்கும் செக் பாயிண்ட் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதாவது உலக அளவில் 25 மில்லியன் மொபைல் போன்களில் “ஏஜெண்ட் ஸ்மித்” என்ற ரகசிய வைரஸ் உள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது. அதில் 15 மில்லியன் பயனாளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
சமீபகாலமாக செல்போன் பயன்படுத்துபவர்களின் வங்கி கணக்கை நூதனமான முறையில் தெரிந்து கொண்டு பணத்தை ஆன்லைனிலேயே கொள்ளையடிக்கும் பேர்வழிகள் வளர்ந்து வருகிறார்கள். ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருக்கும் நபர்களும் அதை சரியாக கையாள தெரியாதது மற்றொரு காரணம். இந்நிலையில் புதிதாக பணம் திருட வந்திருப்பதுதான் இந்த “ஏஜெண்ட் ஸ்மித்”.
கூகிள் ப்ளேஸ்டோரால் அங்கீகரிக்கப்படாத 9ஆப்ஸ் போன்ற இணையத்தில் கிடைக்கும் நம்பகமற்ற அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்வதன் மூலம் இந்த வைரஸ் நமது மொபைல்களில் ஊடுருவும். பிறகு இமெயில் ஐடி, வங்கி விவரங்கள் போன்ற தகவல்களை திருட தொடங்கும். அந்த தகவல்களை பெறுபவர் ஏதாவது ஒரு ஆன்லைன் வழியில் பணத்தை உங்கள் அக்கவுண்ட் மூலமாக எடுத்துக்கொள்வார்.
இதைத்தடுக்க கூகிள் நிறுவனத்தோடு செக் பாயிண்ட் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது. பண பரிவர்த்தனையின்போது ஓடிபி, பாஸ்வோர்ட் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம். முக்கியமாக பண பரிவர்த்தனைக்கு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரபூர்வ அப்ளிகேசன்களை உபயோகப்படுத்துமாறும் பயனாளர்களுக்கு கூகிள் அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து செக் பாயிண்ட் “கூகிள் அங்கீகரிக்காத அப்ளிகேசன்களை மொபைலில் இன்ஸ்டால் செய்யாமல் இருந்தாலே பெரும்பாலும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது” என கூறியுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக இந்தி பேசும் வட இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவியுள்ளது. இந்தி, அரபி, ரஷ்யன் பேசும் பயனாளர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். கஷ்டபட்டு உழைத்த பணத்தை கண் இமைக்கும் நேரத்தில் திருடிவிடும் ஆன்லைன் யுகத்தில் மொபைல் போன்களை கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.