செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஜனவரி 2024 (23:01 IST)

டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி..! 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அசத்தல்..!!

india won
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து  களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஆப்கானிஸ்தான அணி 5 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் எடுத்தார்.
 
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கிய நிலையில், துவக்க வீரரான கேப்டன் ரோகித் சர்மா, டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். சுப்மன் கில் 23 ரன்களிலும்,  திலக் வர்மா 26 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 31 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் தனது அதிரடி ஆட்டத்தால் ரன்களை குவித்த சிவம் துபே 50 ரன்கள் எடுத்து அசத்தினார்.
சிவம் துபே தொடர்ந்து  அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 17.3 ஓவரில்  4 விக்கெட்களை இழந்து  159 ரன்கள் எடுத்து 6  விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிவம் துபே 60 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

இதில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி வருகிற 14-ம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது.