சிரியாவில் நச்சு வாயு தாக்குதல்: 70 பேர் பலி!
சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள தன்னார்வ மீட்பு படையினரான தி வைட் ஹெல்மட்ஸ் குழு, கட்டடத்தின் அடிதளத்தில் பல சடலங்கள் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அறிக்கைகள் இன்னும் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்படவில்லை. ரசாயன தாக்குதல் நடத்தியதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிரிய அரசு, அவை 'ஜோடிக்கப்பட்டவை' என்று தெரிவித்துள்ளது.
அறிக்கைகளை கண்காணித்து வரும் அமெரிக்க அரசுத்துறை, தாக்குதல்களில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், சிரிய அரசுடன் இணைந்து போராடும் ரஷ்யாதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இறுதியில், ரசாயன ஆயுதங்கள் வைத்து எண்ணற்ற சிரிய மக்களை தாக்கியதற்கு ரஷ்யாவே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. வாயு தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டா ஊடக மையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டதாக கூறப்படும் உருளை குண்டில் 'சரின்' எனப்படும் நச்சு இருந்ததாக அதில் தெரிவித்துள்ளது. கிழக்கு கூட்டா பகுதியில்,கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமா, சிரிய அரசு படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.