தி.நகரில் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆய்வாளருக்கு மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்
நேற்று தி.நகரில் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை போக்குவரத்து போலீசார் கடுமையாக தாக்கியதோடு தாயின் கண்முன்னே கம்பத்தில் கட்டி அவருடைய கையை உடைக்க முயன்ற விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர் பிரகாஷ் மீது 294 (b), 332,427 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பிரகாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் போலீஸ் அதிகாரிக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மனித உரிமை கமிஷன் இதுகுறித்து தானாகவே வழக்குப்பதிவு செய்து மனித உரிமையை மீறிய போலீசார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தி.நகரில் இளைஞர் தாக்கப்பட்டது குறித்து ஏப்.18ஆம் தேதி காலை 10.30 மணிக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுரேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தானாக முன்வந்து தொடரப்பட்ட இந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த உத்தரவு காவல்துறையினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.