”சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” – என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது. எத்தனை உற்பத்தி தொழில்கள், தொழிநுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டாலும் ஒரு நாடு தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டியது மிக மிக அவசியமாகும். அந்த வகையில் சீனாவில் கடந்த ஆண்டு தானிய உற்பத்தி 663.84 மில்லியன் டன்களை எட்டியது, இது 1949 ஐ விட 6 மடங்கு அதிகம். இதையடுத்து இந்த ஆண்டு சீனாவின் மொத்த தானிய உற்பத்தி 669.5 பில்லியன் கிலோகிராம்களை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 5.65 பில்லியன் கிலோகிராம் அதாவது 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது என தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.
70 ஆண்டுகளில், சீனாவின் தானிய உற்பத்தி ஒரு புதிய நிலைக்கு முன்னேறியுள்ளது, பொதுவாக தானிய விநியோக பற்றாக்குறையிலிருந்து வழங்கல் மற்றும் தேவைகளின் அடிப்படையில் இது சமநிலையை எட்டியுள்ளது. நாட்டின் தானிய உற்பத்தி தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளாக 650 பில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது, இது சீனாவின் நுகர்வு தேவையை பூர்த்தி செய்யும் ஒரு நிலை என்று என்.பி.எஸ் கிராமப்புற விவகாரத் துறையின் இயக்குனர் லி சுவோகியாங் தெரிவித்தார்.
தானிய உற்பத்தியைப் பொறுத்தவரை, கோதுமை, அரிசி மற்றும் சோளம் போன்ற முக்கிய பயிர்களின் மொத்த மகசூல் 616.75 பில்லியன் கிலோகிராம்களை எட்டியுள்ளது, இது 2019 உடன் ஒப்பிடும்போது 0.5 சதவீதம் அதிகம் ஆகும். அரிசி மற்றும் கோதுமையின் உற்பத்தி முறையே 1.1 சதவீதம் மற்றும் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளது. சோள உற்பத்தி 0.1 பில்லியன் கிலோகிராம் குறைந்தது.
அரசாங்க கொள்கைகளால் சோயாபீன்ஸ் நடவு பகுதி 2019 உடன் ஒப்பிடும்போது 5.9 சதவீதம் அதிகரித்து 59.90 மில்லியன் ஹெக்டேர்களை எட்டியுள்ளது. நடவுப் பகுதியின் விரிவாக்கத்துடன் சோயாபீன்களின் மொத்த உற்பத்தி 8.3 சதவீதம் அதிகரித்து 19.6 பில்லியன் கிலோகிராம் எட்டியது.
கோவிட்-19 மற்றும் பல தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, உணவுப் பற்றாக்குறை குறித்த கவலைகள் எழுந்தது, ஆகஸ்ட் மாத இறுதியில் சீனாவில் ஐந்து சதவீத பயிர்நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் வெள்ளம் மற்றும் கோவிட் -19 ஆகியவற்றின் தாக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று விவசாய அமைச்சின் வல்லுநர்களும் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்படி ஒரு சதவீதம் மட்டுமே இதன் பாதிப்பு இருந்தது. தரணியைக் காக்கும் தலையாய தொழிலாம் வேளாண்மை, ஆதி மனிதன் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு வழிவகுத்தது விவசாயம் தான். எத்தனை பேரிடர்கள் வந்தாலும் விவசாயிகள் நலன்களும் விவசாயப் பணிகளும் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே ஒரு நாடு தலைநிமிர்ந்து நிற்க முடியும்.
அந்த வகையில் சீனாவில் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் 70 ஆண்டுகால வளர்ச்சி, நீர் சேமிப்பு நீர்ப்பாசனம் மற்றும் பிளாஸ்டிக் அழிப்பு போன்றவற்றின் ஊக்குவிப்பு, ஆகியவை விவசாய உற்பத்திக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளன. பங்களிப்பு வீதம் 2018 இல் 58.3 சதவீதத்தை எட்டியது. தற்போது, அரிசி, கோதுமை மற்றும் சோளம் பயிரிடுவதில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாட்டு விகிதம் முறையே 38.8 சதவீதம் மற்றும் 37.8 சதவீதத்தை எட்டியுள்ளது.
சீனாவில் 43 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் உயர்ந்த தரத்துடன் இருப்பதுடன் அவை உயர் மற்றும் நிலையான விளைச்சலைக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் பயனுள்ள நீர்ப்பாசனம் கொண்ட விளைநிலங்கள் 67 மில்லியன் ஹெக்டேர்களை தாண்டுகின்றன. சீனாவின் விவசாயப்பணிகளில் இயந்திரமயமாக்கல் அதிகரித்துள்ளது. 1949 ஆம் ஆண்டில், சீனாவில் 13 கூட்டு அறுவடை இயந்திரங்கள் மட்டுமே இருந்தன. 2018 ஆம் ஆண்டில், 2 மில்லியனுக்கும் அதிகமான கூட்டு அறுவடை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
- திருமலை சோமு