கிரிக்கெட் வீராங்கணை மிதாலி ராஜின் வாழ்க்கை படத்தில் டாப்சி

Last Updated: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (12:31 IST)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முன்னணி வீராங்கணையாக விளங்குபவர் மிதாலி ராஜ். சமீப காலமாக பிரபலங்களின் வாழ்க்கை படமாக உருவாகி வரும்  நிலையில், அவரது வாழ்க்கை படத்தில் டாப்சி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது ஐதராபாத்தில் வசித்து  வருகிறார். 
 
தனது வாழ்க்கையை படமாக எடுக்க மிதாலி ராஜ் அனுமதி அளித்துள்ளார். சிறு வயது முதல், புகழ் பெற்ற கிரிக்கெட் வீராங்கனையாக உயர்ந்தது வரை உள்ள  அவரது வாழ்க்கை சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். தனது வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், தனது  குணமும் பிரியங்கா சோப்ரா குணமும் ஒத்துப்போவதாகவும் முன்னதாக மிதாலி ராஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில் நடிக்க டாப்சி தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நடிகை டாப்சி கூறுகையில், ‘விளையாட்டு வீராங்கனை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்று கூறியுள்ளார்.
 
ஏற்கனவே கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் சச்சின், கேப்டன் டோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை படமாக வெளிவந்தது. கபில்தேவ் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :