அனிதா குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் விஜய்
நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து தனது இரங்கலை தெரிவித்தார் நடிகர் விஜய்.
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்காத காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக மற்றும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தினர். அனிதா மரணத்துக்கு ஏராளமான சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் அனிதா குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து இரங்கல் தெரிவித்தார். மேலும் பணம் உள்பட எந்தவித உதவி தேவைப்பட்டாலும் தான் செய்ய தயாராக உள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.