செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கல்கி அவதாரம் எப்போது தோன்றும் தெரியுமா...?

கல்கி அவதாரம்: கிருஷ்ணாவதாரத்தில் விஷ்ணு பகவான் தர்மம் மீண்டும் அழியும் தருவாயில் அதர்மம் அழித்து தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் எடுப்பேன் என்று கூறியுள்ளார். 


இதனை மெய்ப்பிக்கும் விதமாக பகவத் கீதையில் கலியுகம் முடியும் போது அதர்மம் கோர தாண்டவம் புரியும். அனைத்தும் சர்வ நாசம்  அடையும். அப்போது கல்கி அவதாரம் தோன்றும் என்று கூறபட்டுள்ளது. 
 
நான்கு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ஆண்டுகள் கொண்டது தான் கலியுகம். தற்போதைய நிலவரப்படி ஐந்தாயிரம் ஆண்டுகள் தான் கடந்தாகியிருக்கின்றன.  அப்படி பார்த்தால் இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்கள் இருக்கின்றன. ஆனால் கல்கி அவதாரத்தின் போது என்னவெல்லாம் நடக்கும் என்று கூறப்பட்டதோ  அவற்றில் நிறைய விஷயங்கள் தற்போது குறிப்பால் உணர்த்துவதை இல்லை என்றும் கூற முடியாது. 
 
கல்கி அவதாரத்தின் போது உலகம் அநியாயம் நிறைந்ததாக இருக்கும். புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி முழுவதுமாக வற்றிவிடும். பசுக்கள் அழிந்து போகும். அசைவம் அதிகம் விரும்பப்பட்டு உணவாக கொள்ளப்படும். கணவன் மனைவி உறவி மிகவும் மோசமான நிலையில் இருக்கும். ஒருவரை ஒருவர் மதிக்காமல் வேற்று நபர்களிடம் வெளிப்படையாகவே உறவில் இருப்பார்கள். மனித நேயம் காணாமலே போகும். ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைப்பார்கள். இறை நம்பிக்கை குறைந்து காணப்படும். கோவில்களில் முறையான வழிபாடுகள் இருக்காது. 
 
இப்புவி மிகுந்த வெப்பமடைந்து நோய்கள் முற்றி காணப்படும். உயிரினங்களின் ஆயுட்காலம் வெகுவாகக் குறைந்துவிடும். பருவ கால மாற்றங்கள் சரியாக  இயங்காது. நட்சத்திரங்கள் ஒளி மங்கி காணப்படும். மக்களை சுரண்டும் தலைவர்கள் தான் இருப்பார்கள். சொத்துக்காக தாய், தந்தையை கூட கொன்று விடுவார்கள்.  சுயநலம், சோம்பேறித்தனம், பலவீனம், மூர்கத்தனம் இவையெல்லாம் மனிதர்களிடத்தில் மேலோங்கி காணப்படும். யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
 
மோசமான சூழ்நிலையில் பூமியானது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது கொடுங்கோல் புரியும் அதர்மக்காரர்களை அழிப்பதற்காக கல்கி அவதாரம் நிகழும். கல்கி  மிகுந்த பக்தி நெறியில் இருக்கும் ஒரு தம்பதியின் வயிற்றில் அதீத புத்திக் கூர்மையுடன், ஆஜானுபாகுவான உடல் வலிமையுடன் அனைத்திலும் சிறந்த  அறிவாற்றலுடன் சம்பல என்னும் ஊரில் பிறப்பார். 
 
கல்கி அவதரிக்கும் நேரமாக புரட்டாசி மாதம் சுக்லபட்ச த்விதீயை திதியில் பிறப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அசுரர்களை அழிக்க வெள்ளை குதிரையில் வருவார் என்று குறிப்பிடப்படுகிறது.