1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (10:26 IST)

ரூ.10 ஆயிரத்திற்கு பதிலாக மஸ்கோத் அல்வா : ஆர்.கே.நகரில் பரபர

சென்னை ஆர்.கே.நகர் வாசிகளுக்கு பணத்திற்கு பதிலாக மஸ்கோத் அல்வாவை ஒரு பேப்பரில் சுருட்டி கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
ஆர்.கே.நகரின் இடைத்தேர்தலின் போது அதிமுக தரப்பினரும், டிடிவி தரப்பினரும் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. அதோடு, தினகரன் தரப்பு ஆர்.கே.நகர் வாசிகளிடம் ரூ.20 ரூபாயை டோக்கனாக கொடுத்து விட்டு, தினகரனுக்கு வாக்களியுங்கள். தேர்தல் முடிந்த பின் உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தருகிறோம் என வாக்குறுதி அளித்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த குற்றச்சாட்டை தினகரன் முற்றிலும் மறுத்தார். அதோடு, வாக்குறுதி அளித்த படி தினகரன் தரப்பு ரூ.10 ஆயிரம் ரூபாயை கொடுக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மீனாம்பாள், நேதாஜி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்களர்களை செல்போனில் அழைத்த சிலர், கொடுங்கையூர் பகுதியில் உள்ள குறிபிட்ட இடத்திற்கு வந்து, 20 ரூபாய் நோட்டை தங்களிடம் கொடுத்துவிட்டு ரூ.10 ஆயிரத்தை பெற்று செல்லுமாறு கூறியுள்ளனர்.
 
அங்கு சென்ற போது, காரில் இருந்த 3 பேர் அவர்களிடம் ஒரு பொட்டலத்தை கொடுத்து, இதை இங்கே பிரித்து பார்க்க வேண்டாம். வீட்டில் சென்று பாருங்கள் எனக் கூறியுள்ளனர்.
 
அதன் படி, வீட்டிற்கு வந்து பிரித்து பார்க்கும் போது அதில் மஸ்கோத் அல்வா இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி போலீசாரிடமும் கூற முடியாது என்பதால் அவர்கள் தங்களை தலையில் அடித்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அதேநேரம், இந்த செய்தி முற்றிலும் தவறானது. நாங்கள் யாருக்கும் அல்வா கொடுக்கவில்லை. தினகரன் பெயரை கெடுத்து, மக்களிடையே கோபத்தை உண்டாக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் வேண்டுமென்றே சிலர் இப்படி செய்திருக்கலாம் என டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கூறுகிறார்களாம்.