வியாழன், 7 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (14:23 IST)

தமிழக பட்ஜெட் கானல் நீர் போன்றது..! கடனில்தான் திமுக ஆட்சி நடக்கிறது.!! இபிஎஸ்

EPS
தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பட்ஜெட் கானல் நீர் போன்றது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
 
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எப்போதும் போல்தான் அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்கள் என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, பட்ஜெட்டில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை என்று குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சாலைகளை சீரமைக்க ஒதுக்கிய நிதி குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.
 
8 லட்சம் கோடிக்கு அதிகமான கடனை தமிழக அரசு வைத்துள்ளது என்றும் கடன் பெற்றுதான் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருவதாகவும், இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் நம்பர் ஒன் தமிழ்நாடு தான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார்.

தமிழக பட்ஜெட் கனவு பட்ஜெட் என சொல்கிறார்கள். ஆனால் அது கானல் நீர் போன்றது, மக்களுக்கு பயன் தராது என்று அவர் கூறினார். அதிமுக ஆட்சியை விட தற்போது கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று எடப்பாடி தெரிவித்தார்.

 
மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி, அதற்கான பணத்தை இவர்கள் அறிவித்த திட்டத்திற்கு பயன்படுத்துவதாகவும்,  அதிமுக திட்டங்களின் பெயர்களை மாற்றி வேறு திட்டங்களாக செயல்படுத்துகிறார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.