நடிகை கஸ்தூரி மீது மேலும் 2 வழக்குகள்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஏற்கனவே அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புகார் காரணமாக அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்து இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிராமணர்களுக்கு தனி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மீது பல மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் தெலுங்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், ரெட்டி நல சங்கத்தின் செயலாளர் செல்வராஜ் திருச்சி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கஸ்தூரியின் கருத்துக்கள் தங்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அவர் மீது 196, 352, 353 ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்திந்திய போயர் பெண்கள் நல சங்கத்தின் தொழிற்சங்க நிர்வாகி விஜயலஷ்மி என்பவரும் கஸ்தூரி மீது புகார் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva