செந்தில் பாலாஜிக்கு திமுகவில் முக்கிய பதவி!
தினகரனின் அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவில் இணைந்தார். திமுகவில் அவருக்கு முக்கிய பொறுப்பு ஒன்று தரப்படும் என ஏற்கனவே திமுக வட்டாரங்கள் கூறிய நிலையில் இன்று அவருக்கு பதவி கிடைத்துள்ளது.
இதுவரை கரூர் மாவட்ட திமுகவின் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நன்னியூர் ராஜேந்திரன் விடுவிக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக கரூர் மாவட்ட திமுகவின் மாவட்ட திமுக செயலாளராக இனி செந்தில் பாலாஜி செயல்படுவார் என்றும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட திமுகவின் செயலாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து திமுகவினர் கருத்து கூறியபோது, 'மாற்றுக்கட்சியில் இருந்து திமுகவில் வந்தவர்களுக்கு பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கும் ஒரே கட்சி திமுக தான் என்றும் கூறினர். இருப்பினும் ஒருசிலர் திமுகவில் பல ஆண்டுகளாக இருப்பவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்காமால், நேற்று வந்தவருக்கு பதவியா? என்றும் புலம்புகின்றனர்
கரூரில் செந்தில் பாலாஜிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகம் இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு அவரது பணி தேவை என்பதால் அவருக்கு பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.