எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ வாழ விட மாட்டோம் - புகழேந்தி சூளுரை
எடப்பாடி பழனிச்சாமிக்கு தகுந்த பாடம் கற்பிப்போம் என கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தினகரனையும், சசிகலாவையும் ஒதுக்கிவிட்டு ஓ.பி.எஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றினைந்துள்ளது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ்-ற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி “தமிழக அரசு ஒரு ஊழல் அரசு என குற்றம் சாட்டியவர் பன்னீர் செல்வம். மேலும், தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் எனக்கூறினார். அவரோடு கை கோர்த்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இது மக்களை ஏமாற்றும் வேலை. தைரியம் இருந்தால் சசிகலாவை பொறுப்பில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்நேரம் அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டிருக்கும்.
கூவத்தூரில் அனைத்து எம்.எல்.எல் ஏக்களையும் ஒருங்கிணைத்து சசிகலா ஏற்படுத்திக்கொடுத்த ஆட்சிதான் இது. சசிகலா இல்லையேல் எடப்பாடி முதல்வர் ஆகியிருக்க முடியாது. இவர்கள் அனைவரும் சசிகலா காலில் விழுந்தவர்கள்தான்.
போர் தொடங்கிவிட்டது, பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடியையும், ஓ.பி.எஸ்-ஸையும் வாழ விடமாட்டோம். கட்சியை காப்பாற்ற என்ன நடவடிக்கை தேவையோ அதை எடுப்போம்” என அவர் ஆவேசமாக பேசினார்.