ஆட்சி கவிழ்ப்பா.? புதிய முதல்வரா? - என்ன செய்யப்போகிறார்கள் எம்.எல்.ஏக்கள்?


Murugan| Last Modified செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (13:17 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள விவகாரம்  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ.பி.எஸ் அணி, தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. இதில், எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ் அணியும் ஒன்றாக கை கோர்த்துக்கொண்டது. ஆனால், தினகரனை கட்சியிலிருந்தி நீக்கியும், சசிகலாவையும் நீக்குவது தொடர்பாக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் கூறியது, தினகரன் மற்றும் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தங்களிடம் ஆலோசிக்காமல், தங்களை அழைக்காமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி எல்லா முடிவுகளையும் எடுக்கிறது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுபற்றி நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார் தினகரன். அதைத் தொடர்ந்து இன்று காலை ஆளுநரை சந்தித்த 19 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த கடிதத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க விரும்பினால், உடனே சட்டமன்றத்தை கூட்டி, முதல்வர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். அப்படி ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில் அந்த நிலைப்பாட்டை திமுக கையில் எடுக்கும் எனத் தெரிகிறது. இதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினே செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.


 

 
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஆட்சியை கவிழ்ப்பது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நோக்கமாக இருக்காது என்பதுதான். ஏனெனில், ஒரு வேளை அதிமுக ஆட்சி கவிழ்ந்து, திமுக ஆட்சி அமைத்துவிட்டால் அதோ கதிதான். முழுமையாக இன்னும் 4 வருடங்கள் இருக்கும் போது, தங்களின் எம்.எல்.ஏ பதவியை இழக்க ஒருவரும் முன் வரமாட்டார்கள். 
 
ஒன்று, எடப்பாடி பழனிச்சாமி தங்களை அழைத்து சமரசம் பேச வேண்டும். அல்லது அதிமுகவிலேயே தங்களை அரவணைத்து செல்லும் வேறொருவர் முதல்வராக அமரவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது எனத் தெரிகிறது.
 
அதே சமயம், சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டால், எடப்பாடி அரசை கவிழ்க்கவும் தயங்கமாட்டோம் என அந்த 19 எம்.எல்.ஏக்களில் சிலர்  பகீரங்கமாக மிரட்டல் விடுத்ததையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும். 
 
எதுவாக இருந்தாலும், ஆளுநர் நடவடிக்கை எடுத்து, சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் போது எம்.எல்.ஏக்களின் நிலைப்பாடு என்ன என்பதிலேயே தமிழக அரசியல் அடங்கியிருக்கிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :