1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (12:19 IST)

இது டெங்கு சாமிகளின் அரசு - மௌனப்புரட்சியில் தமிழக மக்கள்

இந்த செவிட்டு அரசின் காதுகளை டெங்குவின் மரண ஓலங்கள் கேட்கிறதா? இல்லையா?. 


 

 
மருத்துவமனைகள் தோறும் மக்கள் கூட்டம்! தினமும் பத்துக்கும்  மேற்ப்பட்ட டெங்கு மரணங்கள்!  எங்கும் மக்கள் மத்தியில் மரண பயம்! மக்கள் செத்துக் கொண்டு இருக்கும் போது இந்த அரசுக்கு எம். ஜி. ஆர். நூற்றாண்டு விழா ஒரு கேடா? செத்துக்கொண்டு இருக்கும் மக்களை காக்காத ஒரு அரசு இருந்தால் என்ன? மாண்டால் என்ன ? மெல்ல சாகும் ஒரு அரசு, மக்களை சாகட்டும் என்று சொல்கிறதா?  இது பழனிச்சாமி அரசா ? டெங்கு சாமி அரசா?
 
மாவட்டம் தோறும் விழா நடத்தி, தேர் பவனி வரும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் எம். ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை நடந்த தயாரா? முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், எத்தனை மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்? துணிவு இல்லாத, செயல்படாத,  இந்த அரசு என்ன குருட்டு அரசா? குருட்டு  அமைச்சர்களின் அரசா?
 
என்ன துணிச்சல்! மத்திய குழு உறுப்பினருக்கு, சில ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, நாற்பது பேர் மரணம் என்பது சாதாரண விசயம் என்கிறார். தமிழன் உயிர் என்ன மலிவு விலை சரக்கா? உப்புக்கு சப்பாணி பெறாதவன் ஆகி விட்டானா தமிழன் ? நான் அந்த மத்திய குழு உறுப்பினரைப் பார்த்து பார்த்து கேட்கிறேன்!  லட்சம் பழனிசாமிகளில் ஒரு பழனிசாமி (மாண்புமிகு முதலமைச்சர் அல்ல) டெங்குவால் செத்தால் என்ன? லட்சம் சீனிவாசன்களில் ஒரு  சீனிவாசன் (மாண்புமிகு அமைச்சர் அல்ல) டெங்குவால் செத்தால் என்ன?
 
மக்கள் தெளிக்க வேண்டியது சாணம் அல்ல, இந்த அரசின் மீது கனரக அமிலங்களை! மக்கள் கொளுத்த வேண்டியது பட்டாசுகளை அல்ல, இந்த அரசின் அலட்சியங்களை!
 
மக்கள் மௌனம் களையும் வரை எங்களை ஆளுக! அது வரைதான் இந்த ஆட்சியின் நாட்கள்.


 
இரா காஜா பந்தா நவாஸ்