1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2017 (15:47 IST)

சசிகலா பரோலில் வர முடியுமா? - செக் வைத்த எடப்பாடி பழனிச்சாமி

தனது கணவரை சந்திக்க 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ள சசிகலாவை வெளியே வர  விடாமல் தடுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஈடுபட்டுள்ளது.


 

 
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  கடந்த 9 மாதங்களாக கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்னைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் அவரது கல்லீரல் தற்போது மோசமாக உள்ளதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் சசிகலாவை பரோலில் வெளியே எடுக்க அவரது குடும்பம் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் சசிகலா சார்பில் தனது கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஒரு மனு சசிகலா அடைக்கப்பட்டுள்ள அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில், சசிகலா தனது பெயரை விவேகானந்தன் சசிகலா என சமீபத்தில் அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் செய்துள்ளார். அதாவது, தனது கணவர் நடராஜன் என்பதை தவிர்ப்பதற்காகவே அவர் தனது பெயரை மாற்றியுள்ளார். இந்நிலையில், திடீரெனெ தற்போது தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி பரோலுக்கு விண்ணப்பித்துள்ளார். 


 

 
அவர் தனது பெயரை விவேகானந்தன் சசிகலா என மாற்றியது ஏன்?, அரசு கெஜட்டில் தனது கணவர் நடராஜன் குறித்த விவரங்களை தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? என்பது போன்ற விசாரணையை நடத்திய பின்னரே அவருக்கு பரோல் கொடுப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இதுகண்டு அதிர்ச்சியடைந்துள்ள சசிகலாவின் உறவினர்கள், அதற்கான பதில் மனுவை தாக்கல் செய்யும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் 30 வருடங்களுக்கும் மேலாக போயஸ் கார்டனில் வசித்து வந்த சசிகலா, எந்த இடத்திலும் தனது கணவர் நடராஜன் என்பதையோ, அவருடன் தொடர்பில் இருப்பதாகவோ காட்டிக்கொள்ள வில்லை. அதேபோல், தனது பெயரை சசிகலா நடராஜன் என்பதை மாற்றி வி.கே.சசிகலா (விவேகானந்தன் சசிகலா - தந்தை பெயர்) என பெயர் மாற்றமும் செய்தார்.
 
தற்போது அந்த விவகாரத்தையே, பரோலில் அவரை வெளியே வராமல் தடுக்க எடப்பாடி தரப்பு ஆயுதமாக கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.