சாலையில் இறங்கி போராடிய கொரோனா நோயாளிகள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
சாலையில் இறங்கி போராடிய கொரோனா நோயாளிகள்
காஞ்சிபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென 50 கொரனோ நோயாளிகள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாங்காடு மருத்துவ கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சுடு தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகூட இல்லாத இந்த கொரோனா வார்டில் நாங்கள் தங்கமாட்டோம் என அங்கு தங்கியிருந்த சுமார் 50 கொரோனா நோயாளிகள் திடீரென கொரோனா வார்டில் இருந்து வெளியே வந்து சாலையில் உட்கார்ந்து போராடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் உட்கார்ந்து போராடினாலும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து அவர்கள் போராடியதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கொரோனா வார்டில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து கொரோனா நோயாளிகள் போராட்டத்தை கைவிட்டு கொரோனா வார்டுக்கு திரும்பிச் சென்றனர். கொரோனா நோயாளிகள் திடீரென சாலையில் இறங்கி போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது