வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:25 IST)

சென்னையில் 3 நாள் கனமழை வானிலை மையம் எச்சரிக்கை!குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

சென்னை வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை உருவானது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்பட வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும். 
 
அதன் தொடர்ச்சியாக அந்த மாவட்டங்களுக்கு 17ம் தேதி வரை ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாட்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில், வட கிழக்கு பருவமழை தற்போது தொடங்க உள்ளது. முன்னதாக வட கிழக்கு பருவமழை காலத்தில் இந்தியா முழுமைக்குமான மழைப் பொழிவு கணிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் வட கிழக்கு பருவமழை இயல்பைவிட 112 சதவீதம் முதல் 115 சதவீதம் கூடுதலாக பெய்யும் என்று கணித்துள்ளது.
 
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையடுத்து, வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று நேற்று காலை உருவானது. இதனால், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
 
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று (15ம் தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். பின்னர் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொள்ளும். அதற்கு பிறகு மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். அதன் காரணமாக வட தமிழகத்தில் கனமழை பெய்யும்.
 
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து 4 நாட்களில் விலகும் நிலையில் கிழக்கு மற்றும் வட கிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும். அதனால் வட கிழக்கு பருவமழை நாளை அல்லது  மறுநாள் (15 அல்லது 16ம் தேதி) தொடங்கும். அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும். அதற்கடுத்த 2 நாட்களுக்கும் மழை நீடிக்கும். 17ம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா, கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
 
மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன்தினம் (13ம்தேதி) 50 மிமீ மழை பெய்துள்ளது. வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த கனமழை எச்சரிக்கை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பருவ மழையை வழக்கமாக எதிர்கொள்வது போல் எதிர்கொள்ளலாம். அவரவர் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளை திட்டமிடலாம். 25 செமீ அளவுக்கு மழை பெய்யும் என்று கூறுவது சரியானது அல்ல. குறிப்பிட்ட இடத்தில் 20 முதல் 25 செமீ வரை மழை பெய்யும் என்று கணித்து சொல்ல முடியாது. அந்த அளவுக்கு மழை பெய்த பிறகு தான் தெரியவரும். அதனால் கனமழை பெய்யும் என்றால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.