வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By Sasikala

ஸ்பைசி கோங்குரா (புளிச்சக்கீரை) சிக்கன் செய்ய தெரிந்து கொள்வோம்.....

தேவையான பொருட்கள்:
 
சிக்கன் - அரைக்கிலோ
புளிச்சக்கீரை/கோங்குரா  - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி, பூண்டு - தலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
கீரையை நன்றாக மண் போக அலசிக் கொள்ளவும். பின்பு இலையின் காம்பை நறுக்கி எடுத்து கீரையை மட்டும்  உபயோகிக்கவும். முதலில் கீரையை வதக்கி அரைக்க வேண்டும்.
 
ஒரு வாணலியில் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும்.  அத்துடன் கீரையை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இந்த கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்கு வதக்கி  ஆற வைக்கவும். மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
 
ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். பிறகு சிக்கன் சேர்த்து மீண்டும் பிரட்டி வதக்கவும்.
 
பின்னர் மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். வேகவைத்து,  சிக்கன் வெந்த பின்பு தயார் செய்த கோங்குரா விழுதை சேர்க்கவும். நன்கு கொதித்து சிக்கனும் கீரை விழுதும் சேர வேண்டும்.  சுவையான ஆந்திரா கோங்குரா சிக்கன் ரெடி.
 
குறிப்பு:
 
கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம், உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும். விரும்பினால் பொடியாக நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.