அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே பேசிய ராகுல்காந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளை ஆர்.எஸ்.எஸ் தாழ்வாக கருதுவதாக பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் வெர்ஜீனியாவின் ஹெர்ண்டன் நகர் சென்றிருந்த அவர் அங்குள்ள புலம்பெயர் இந்திய மக்களிடையே பேசினார்.
அப்போது அவர் “பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து இந்தியாவில் நிச்சயமாக ஏதோ மாறியிருக்கிறது. பாஜகவும், பிரதமரும், சில ஊடகங்களும் சேர்ந்து ஏதோதோ பிம்பங்களை பல ஆண்டுகளாக பரப்பினார்கள். ஆனால் அதெல்லாம் முடிவுக்கு வர சில நொடிகளே ஆனது. நாடாளுமன்றத்தில் நான் பிரதமரை பார்க்கிறேன். 56 இன்ச் மார்பு கொண்ட பிரதமரின் எண்ணத்தை என்னால் உங்களுக்கு சொல்ல முடியும். அவர் கடவுளுடன் நேரடி தொடர்புக் கொண்டவர் என்பதெல்லாம் போய்விட்டது.
சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட தாழ்ந்தவை, சில மொழிகள் மற்ற மொழிகளை விட தாழ்ந்தவை, சில மதங்கள் மற்ற மதங்களை விட தாழ்வானவை என்று ஆர்.எஸ்.எஸ் சொல்கிறது. அனைவருக்கும் வரலாறு, பாரம்பரியம், மொழி உள்ளது. அவை ஒவ்வொன்றுமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் தமிழ், மராத்தி, பெங்காலி, மணிப்புரி எல்லாமே தாழ்ந்த மொழிகள் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம்.
இந்தியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததுதான் பிரச்சினை. இந்தியா அனைவருக்குமானது என்பதை பாஜக புரிந்து கொள்ள தவறிவிட்டது” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K