1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (12:06 IST)

கூலி வேலை செய்து படிக்கும் அனாதை சிறுவர்கள்! – நேரில் சந்தித்த பிரதமர் மோடி

PM Modi
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பெற்றோர் இல்லாமல் தனியே வாழ்ந்து வரும் இரு சிறுவர்களை சந்தித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில் பிரதமர் மோடி பாஜகவுக்கு ஆதரவாக குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே நேற்று நேத்ராங் பகுதியில் அனாதையான இரு சிறுவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

14 வயதாகும் அவி மற்றும் 11 வயதாகும் ஜெய் ஆகிய அந்த இரு சகோதரர்களின் தாய், தந்தையர் 6 ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். அதன்பின் சிறுவர்கள் இருவரும் தங்களை தாங்களே கவனித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இருவருமே பள்ளி படிப்பு போக மீத நேரத்தில் கூலி வேலை செய்து அந்த வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.


அவர்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, இவ்வளவு இன்னல்களுக்கு இடையேயும் விடாமல் படிப்பை தொடரும் அவர்களது உத்வேகத்தை பாராட்டினார். அவர்களுக்கு வீட்டில் தொலைக்காட்சி, கணினி போன்ற வசதிகளை செய்து தருவதுடன், அவர்களது கல்வி செலவையும் முழுமையாக ஏற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அவர்களை சந்தித்தது குறித்து பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, தான் சந்தித்து பேசிய பழங்குடி சிறுவர்கள் பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாவிட்டாலும் பெரிய கனவுகளை கொண்டிருப்பது கண்டு உத்வேகம் கொள்வதாக கூறியுள்ளார்.

Edit By Prasanth.K