டாக்டர் மேல கைய வெச்சா அபராதம்! – வருகிறது புதிய சட்டம்!
அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை தாக்குபவர்களை தண்டிக்க புதிய சட்டம் தயாராகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயளி ஒருவர் இறந்தார். மருத்துவரின் கவனக்குறைவால்தான் அந்த நபர் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவரை தாக்கினர்.
இதனால் நாடு முழுக்க மருத்துவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். மருத்துவர்களை தாக்குபவர்களை தண்டிக்க புதிய சட்டம் அமல்படுத்தக் கோரியும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய சுகாதார அமைச்சகம் புதிய சட்டம் இயற்ற 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
அவர்கள் உருவாக்கிய சட்ட வரைவின்படி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கி காயப்படுத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் உள்ள உபகரணங்கள் பொருட்களை சேதப்படுத்தினால் அந்த உபகரணத்தின் விலையை விட இரு மடங்கு அதிகமாக கொடுக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனையில் மற்ற அமைச்சகங்களும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அடுத்த வாரம் மத்திய மந்திரி சபைக்கு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
இதுகுறித்து கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் “டாக்டர்கள் மீதான் வன்முறை அதிகரித்து வரும் சூழலில் இந்த சட்டம் மிகவும் அவசியப்படுகிறது” என கூறியுள்ளார்.