1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:51 IST)

துஷ்ட பேயை ஏவும் மந்திரவாதி? மகளை காக்கும் தாய்! – கனெக்ட் விமர்சனம்!

Connect
நயன்தாரா நடித்து அஸ்வின் சரவணன் இயக்கி வெளியாகியுள்ள ‘கனெக்ட்’ த்ரில்லர் படத்தின் விமர்சனம்.

நயன்தாரா – அஸ்வின் சரவணன் காம்போவில் ஏற்கனவே வெளியாகி நல்ல ஹிட் கொடுத்த படம் மாயா. அதை தொடர்ந்து தற்போது இருவர் காம்போவில் வந்துள்ளது கனெக்ட்.

சூசன் (நயன்தாரா) தனது மகள் அன்னா, கணவர் ஜோசப் (வினய்) மற்றும் தந்தை சத்யராஜூடன் வாழ்ந்து வருகிறார். கொரோனா வைரஸ் ஊருக்குள் பரவ தொடங்கிய சமயம் மருத்துவரான ஜோசப் மருத்துவமனையில் தங்கி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். அதனால் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்து போகிறார்.

அதை தொடர்ந்து சூசனுக்கும், அன்னாவுக்கு கொரோனா பாதிப்பு வரவே அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்படுகிறது. இறந்த தனது அப்பாவிடம் பேச விரும்பும் அன்னா ஆன்லைன் மூலம் மந்திரவாதி ஒருவனை நாடுகிறாள். ஆனால் மந்திரவாதி அன்னாவின் தந்தையை அழைக்காமல் துஷ்ட பேய் ஒன்றை அன்னா மீது ஏவி விட்டுவிடுகிறான்.


துஷ்டப்பேயிடம் இருந்து தனது மகளை சூசன் மீட்டாரா? மந்திரவாதி ஏன் அப்படி செய்தான்? இறுதியில் என்ன ஆனது? என்பது திகில் கிளப்பும் முழு திரைப்படம். மாயா திரைப்படத்தை போலவே இதிலும் திகில் காட்சிகளில் த்ரில்லிங்கை கிளப்பியுள்ளார் அஸ்வின். நயன்தாரா மற்றும் சக நடிகர்களின் நடிப்பு சிறப்பு. சில கதாப்பாத்திரங்களையும், மூடப்பட்ட ஒரு வீட்டையும் மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சரியான த்ரில்லர் அனுபவத்தை திரைக்கதையில் கொடுத்துள்ளார் இயக்குனர்.

கொரோனா காலத்தில் மருத்துவ ஊழியம் செய்து இன்னுயிர் தந்த மருத்துவர்களை குறிக்கும்படியான காட்சிகளும், கொரோனா ஊரடங்கில் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை மையப்படுத்தி அமைந்த காட்சிகளும் படத்துடன் மக்கள் தொடர்புப்படுத்தி கொள்ளும் காட்சிகளகா அமைந்துள்ளன. இடைவேளையே இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தின் சுவாரஸ்யமான காட்சிகளுக்கு நடுவே திடீர் இடைவேளை போடுவது சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

Edit By Prasanth.K