வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஜூலை 2018 (20:57 IST)

தூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா

ஆழ்ந்த தூக்கம் மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒரு முக்கிய காரணம். உடல் இயக்கங்கள் சிறப்பாக அமைவதற்கு தூக்கம் உறுதுணையாக இருக்கிறது. தூக்கத்தில் குறைபாடு ஏற்பட்டால், அது நமது அந்த நாளின் வேலைகளில் ஒரு பின்னடைவைத் தருகிறது.

 
ஒரு இரவு முழுவதும் ஆழ்ந்த தூக்கம் இல்லாமை, அல்லது தூக்கத்தின் இடையில் அடிக்கடி விழிக்கும் தன்மை போன்றவற்றை தூக்கமின்மை கோளாறு அல்லது இன்சோம்னியா என்று கூறுவார்கள்.
 
ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 6-8 மணி நேர தூக்கம் என்பது போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு இந்த குறிப்பிட்ட நேரத் தூக்கம் கிடைப்பதில்லை. படுத்தவுடன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதும், தூக்கத்தின் இடையில் விழிப்பதுமாக நேரம் கடந்து விடுகிறது. உங்கள் தூக்கத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
இரவு நேரத் தூக்கத்திற்காக உங்களைத் தயார் படுத்த யோகாசனம் அல்லது உடற்பயிற்சி உதவுகிறது. இந்த பயிற்சிகளால் உடல் நெகிழ்ந்து ஆழ்ந்த தூக்கம் வர உதவுகிறது. நல்ல தூக்கம் வருவதற்கு உங்கள் உடலும் மனமும் திடமாக இருக்க வேண்டும். யோகாசனம், இன்சோம்னியா அல்லது தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான மற்ற கோளாறுகளுக்கு வெற்றிகரமான தீர்வுகளைக் கொடுக்க வல்லது. மேலும், உடல் அளவில் நீங்கள் தளர்ந்தாலும், தூக்கம் என்பது உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தினாலும், இந்த பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம். 
 
சிரசாசனா, சர்வாங்காசனா, பச்சிமொட்டாசனா, உத்தனாசனா, விபரீதகரணி, ஷவாசனா போன்ற ஆசனங்கள் நல்ல தீர்வைத் தருகின்றன. உடலின் எல்லா நிலைகளுக்கும் உடற்பயிற்சி நல்ல தீர்வைத் தருகிறது. குறிப்பாக இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு உடற்பயிற்சி தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
 
ஜாக்கிங், வேகமான நடைபயிற்சி, நீச்சல், ஸ்கிப்பிங், என்று இதய துடிப்பை அதிகரிக்கச் செய்யும் மூட்டுகளுக்கு அசைவைக் கொடுக்கும் எந்த ஒரு பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இந்த பயிற்சிகளைத் தூங்கும் நேரத்திற்கு சற்று முன்னதாக திட்டமிடலாம். இதனால் உங்கள் தூக்கம் மேம்படும்.
 
தூக்கமின்மையை போக்க, தினசரி ஒரே நேரத்தில் தூங்கி விழிக்கும் பழக்கத்தை நடைமுறையில் கொள்ளுதல் அவசியம் ஆகும். ஒன்று அல்லது இரண்டு நாள், தொடர்ந்து ஒரே முறையை முயற்சிக்கும்போது அதுவே தொடர்ந்து பழக்கமாக மாறலாம். இதனால் உங்கள் தூக்கத்தின் தன்மை மேம்படும்.