செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (16:00 IST)

ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன்

யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின.

 இது குறித்துக் கூறிய யுக்ரேன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். யுக்ரேனில் உள்ள ரஷ்ய படையினருக்கு பொருள்களை விநியோகம் செய்வதற்கான முக்கிய மையமாக இந்த நகரம் விளங்கி வந்துள்ளது.

அருகில் உள்ள இஸ்யும் நகரில் இருந்து தங்கள் படையினர் பின்வாங்கியிருப்பதாகவும் திரும்ப ஒன்று சேரும் நடவடிக்கைக்காகவே இப்படிச் செய்திருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்றாவதாக, டானட்ஸ்க் போர் முனையில் தங்கள் படைகளை வலுப்படுத்துவதற்காக பாலாகியா என்ற இன்னொரு நகரில் இருந்தும் தங்கள் படைகள் பின்வாங்கியிருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

தற்போது தாங்கள் முன்னேறிய இடங்களை யுக்ரேன் படைகள் தக்க வைத்துக்கொண்டால், கடந்த ஏப்ரலில் யுக்ரேன் தலைநகர் கீயவ் அருகில் இருந்து ரஷ்யா பின்வாங்கியதற்குப் பிறகு யுக்ரேனுக்கு கிடைத்த மிக முக்கிய முன்னேற்றமாக இது இருக்கும்.

இந்த மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்த புதிய பதில் தாக்குதல்களின் மூலம் ரஷ்யாவிடம் இருந்து தங்கள் நாட்டின் 2,000 சதுர கி.மீ. பரப்பை விடுவித்திருப்பதாக யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி சனிக்கிழமை வெளியிட்ட வீடியோ உரையில் குறிப்பிட்டார்.

இவற்றில் பாதி பகுதி முந்தைய 48 மணி நேரத்தில் கைப்பற்றப்பட்டதாகவும் அவரது உரை குறிப்பிடுகிறது. இஸ்யும் பகுதியில் இருந்து பின்வாங்கியிருப்பதாக ரஷ்யா ஒப்புக் கொண்டிருப்பது மிக முக்கியமானது. ஏனெனில், இந்த நகரம் ரஷ்ய படையினருக்கான முக்கியமான ராணுவ மையமாக இருந்து வந்தது.

"இஸ்யும் - பாலாகியா படைக் குழுக்களை அங்கிருந்து குறைத்து டானெட்ஸ்க் மக்கள் குடியரசு பகுதிக்கு அவர்களை மாற்றும் மூன்று நாள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய படையினருக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக எதிரியின் மீது வலுவான தாக்குதல் நடத்தப்பட்டது" என்கிறது ரஷ்ய அறிக்கை.

சிறிது நேரத்தில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருக்கும் கார்கீவ் பகுதியின் நிர்வாகி, உயிரிழப்பைத் தடுப்பதற்காக இந்தப் பகுதியில் குடியிருப்போர் இடம் பெயர வேண்டும் என்று பரிந்துரைத்தார். இந்தத் தகவலை ரஷ்ய அரசு நடத்தும் டாஸ் செய்தி முகமை தெரிவித்தது.

இந்தப் பகுதியில் இருந்து எல்லையைக் கடந்து ரஷ்யாவுக்குள் வருவதற்கு வரிசையில் வரும் மக்களுக்கு வெப்பமூட்டி, உணவு, மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்று, இந்தப் பகுதிக்கு அருகே ரஷ்யாவில் அமைந்துள்ள பெல்கோரோட் பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கீயவ் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த, ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளை மீண்டும் எடுத்துக்கொள்ளும் வலிமை யுக்ரேன் ராணுவத்துக்கு உண்டு என்பதைக் காட்டும் அறிகுறியாக யுக்ரேனின் இந்த ராணுவ முன்னேற்றங்கள் அமைந்துள்ளன. இதன் மூலம் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளுவதில் ஆர்வம் கொண்ட தங்களது மேற்கத்திய கூட்டாளிகளிடம் இருந்து கூடுதல் ராணுவ உதவிகளைக் கோருவதற்கான வாய்ப்பாகவும் இது யுக்ரேனுக்கு அமைந்துள்ளது.

மேலதிக மேற்கத்திய ஆயுதங்களின் உதவியோடு, யுக்ரேனிய படைகளால் ரஷ்ய ராணுவத்தைத் தோற்கடிக்க முடியும் என்பதை இந்த சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன என்று யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.