வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 24 மே 2018 (16:10 IST)

ராகுல் காந்தியின் திட்டமும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், ஐக்கிய முற்போக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சோனியா காந்தியும், குமாரசாமியை சந்தித்து கர்நாடக மாநில முதல்வர் பதவி குறித்து விவாதித்து இருப்பார்கள்.
 
இருதரப்பும் புன்னகையை தவழவிட்டு மிகவும் நல்லியல்புடன் விவாதித்தாலும், இருதரப்புக்கும் தேர்தல் கால பேச்சு குறித்து தெளிவாக தெரியும். தேர்தல் காலத்தின் போது ராகுல் காந்தி, குமாரசாமியின் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியின் `பி` அணி என்று விளித்தார்.
 
வெறும் 37 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள குமாரசாமி முதல்வராக ஆகும் போது, 78 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள காங்கிரஸ் துணை முதல்வராக ஆகலாம். ஆனால் இதை நிர்வகிப்பது ராகுல் காந்தியின் பிரச்சனை. அவர்தான் எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஒரு வினை ஊக்கியாக இருக்க வேண்டும்.
 
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்கு ராகுல் காந்தியிடம் இப்போது அதிக அவகாசம் இல்லை. குஜராத் தேர்தலில் பட்டிதார் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மற்றும் தலித் தலைவர் ஜிக்னெஷ் மேவானியுடன் இணைந்தததைப் போல பா.ஜ.கவின் எதிரிகளை அவர் ஒருங்கிணைக்க வேண்டும். இந்த இருவரையும் ஒரே மேடையில் இணைப்பது ராகுலுக்கு சுலபமானதாக இருக்கவில்லை.
 
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு, ஆட்சி அமைக்க பா.ஜ.க சாம, பேத, தான, தண்டம் என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் எடியூரப்பாவின் முயற்சிகளும், வியூகங்களும், தந்திரங்களும் எடுபடவில்லை. தேர்தலுக்கு முன்னரே ம.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருந்தால், தேர்தல் முடிவு மாறியிருக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி தற்போது சரியாகப் புரிந்து கொண்டிருக்கும்.
 
பலமான கூட்டணி
 
காங்கிரஸ் தன்னை தேசியக் கட்சி என்று அழைத்துக் கொள்கிறது ஆனால் அது `பிபி கட்சி' (பஞ்சாப் மற்றும் புதுச்சேரி கட்சி) என்று பிரதமர் நரேந்திர மோதி பகடி செய்வதையும் மற்றும் எப்படியேனும் அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா திட்டமிடுவதையும் ராகுல் காந்தி கூர்ந்து கவனித்து வருகிறார். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு அவர் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க திட்டமிடுகிறார் என்கிறது காங்கிரஸ் வட்டாரம்.
 
கர்நாடக முதல்வர் பதவியேற்கும் போது, அந்த மேடையில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், சீதாராம் யெச்சூரி மற்றும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் இருப்பார்கள். அண்மையில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறிய, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இந்த மேடையில் இருப்பார். இது எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துவிட்டன என்ற அழுத்தமான செய்தியை அமித் ஷாவுக்கு சொல்லும்.
 
ராகுல் அனைத்து மூத்த தலைவர்களையும் திறம்பட பயன்படுத்த தொடங்கிவிட்டார் என்று தெரிகிறது. சந்திரபாபு நாயுடு மற்றும் மாயாவதியிடம் தொடர்புக் கொள்ள காங்கிரஸின் மூத்த தலைவர் அஹமத் பட்டேலை ராகுல் பயன்படுத்தி இருக்கிறார் என்பது தெரிகிறது.
 
ராகுலும் சோனியாவும்
 
காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாகவே, அனல் கக்கும் மம்தா பானர்ஜியை தனது இணக்கமான குணத்தினால் சோனியா காந்தி கூட்டணிக்குள் வெற்றிகரமாக கொண்டு வந்ததை ராகுல் காந்தி உணர்ந்துகொண்டார். இப்போது கட்சியின் தலைமை ராகுலிடம் இருக்கிறது. பிராந்தியக் கட்சிகளை ஒன்றிணைப்பது அவர் முன்னால் இருக்கும் மாபெரும் சவால்.
 
கர்நாடகாவில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து விலக்கி வைப்பதற்கு குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான, தேவே கெளடவிடம் உரிய நேரத்தில், ராகுல் காந்தி பேசினார். பாஜகவுடன் இணைய மகனுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். கர்நாடகாவில் தனது அரசியல் இலக்கை அடைய இளம் மற்றும் அனுபவமிக்க தலைவர்களை ராகுல் காந்தி பயன்படுத்தினார்.
 
சோனியா காந்தியின் அடையாளமான அரசியல் நெட்வொர்க் மற்றும் தனிப்பட்ட உறவுகளை பராமரிக்கும் தன்மை ராகுல் காந்தியின் குழுவிடம் இல்லை. எந்த எதிர்க்கட்சித் தலைவரும் விட்டுப்போய்விடக்கூடாது என்பதை உறுதி செய்யும் சூழ்நிலையில் ராகுல் காந்தி தற்போது பணியாற்றுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
 
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள ராகுல் காந்தியும் அவரது இளம் படையும், மூத்த தலைவர்களுக்கு வழிவிட்டு தற்காலிகமாக பின் இருக்கையில் அமர்ந்துள்ளனர். அஹமத் படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை உண்டாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். கர்நாடகா தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு கூட்டணி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தி உள்ளது.
 
மே 28 ஆம் தேதி நடக்க இருக்கும் உத்தர பிரதேச மாநில கைரானா தொகுதி இடைத்தேர்தலும் கூட்டணி விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கும். கைரானாவில் எதிர்கட்சிகள் வென்றால், இந்த கூட்டணி எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக செல்லும்.
 
ஒன்று சேர் அல்லது அழிந்து போ
 
எதிர்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். மோதியையும், அமித் ஷாவையும் எதிர்கொள்ள வேண்டுமானால், ஒன்று ஒன்றிணைய வேண்டும் இல்லாவிட்டால் அழிந்து போக வேண்டும்.