வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (13:59 IST)

நாசா விண்வெளிக்கு அனுப்பிய 169 கோடி ரூபாய் கழிவறை: என்ன சிறப்பு?

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத ஜீரோ-க்ரேவிட்டி கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு  அனுப்பியுள்ளது.

தற்போது பரிசோதனை நோக்கில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ள இந்தக் கழிவறை எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசாவால்  பயன்படுத்தப்படலாம்.
 
பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகள் அனுப்பப்படும் பொழுது 23 மில்லியன் டாலர் (சுமார் 169 கோடி இந்திய ரூபாய்) மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கழிவறையும் அனுப்பி வைக்கப்பட்டது.
 
இதற்கு முந்தைய கழிவறை மாதிரிகளை போலல்லாமல் இந்த கழிவறை பெண் விண்வெளி வீரர்களுக்கு எளிமையானதாக இருக்கும் நோக்கில்  வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
 
புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், மனித உடலிலிருந்து கழிவுகளை உறிஞ்சி எடுக்கும் வகையில் இந்தக் கழிவறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
விண்வெளி வீரர்களின் தனியுரிமை கருதி, பூமியில் இருக்கும் ஒரு பொதுக் கழிவறையைப் போலவே இந்த கழிவறையும் சுற்றிலும் மூடப்பட்டிருக்கும்.
 
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகளை கொண்டு செல்லும் கலன் வியாழனன்று வர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவிலிருந்து ஒரு ராக்கெட் மூலம் புறப்பட இருந்தது.
 
எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது புறப்பட இருந்ததற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னர் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.
 
சரக்குகளை சுமந்து செல்லும் இந்த விண்கலத்துக்கு இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையை போற்றும் வகையில் எஸ்.எஸ். கல்பனா சாவ்லா என்று பெயரிடப்பட்டுள்ளது.
 
தொழில்நுட்ப கோளாறுகள் முற்றிலும் சரி செய்யப்பட்டு, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை இந்த ராக்கெட் கிளம்பியது.
 
அக்டோபர் 5ஆம் தேதி, திங்கள்கிழமை இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்று சேரும் என்று நாசா தெரிவித்துள்ளது.