புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinojkiyan
Last Modified: வெள்ளி, 15 நவம்பர் 2019 (21:40 IST)

MH17 விமானத் தாக்குதல்: சுட்டு வீழ்த்த ரஷ்யா கட்டளையிட்டதா?

மலேசிய விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்த சர்வதேச விசாரணையில், இந்த சம்பவத்துக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எம்எச்17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களாக கருதப்படும் கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகளை ரஷ்யாவின் உயர் அதிகாரிகள் வழிநடத்தியதாக புலனாய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மூத்த உதவியாளர் ஒருவர் கிழக்கு உக்ரேனிலுள்ள பிரிவினைவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
உக்ரேனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில், 2014ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி பறந்துகொண்டிருந்த எம்எச்17 விமானத்தை ஏவுகணை கொண்டு தாக்கியதில் அதில் பயணித்த 298 பேரும் உயிரிழந்தனர்.
 
எனினும், இந்த புதிய குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மறுப்புத் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, சர்வதேச புலனாய்வாளர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப விசாரணையை கையாண்டதாக கூறினார்.
 
நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த சர்வதேச விசாரணை குழு, இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் நான்கு நபர்களில் இருவருடன் ரஷ்யா தொலைபேசி வழியாக தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக அந்த குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.