விமானத்தில் விரிசல் : 50 விமானங்கள் நிறுத்தி வைப்பு - என்ன நடந்தது?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்வாண்டாஸ் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் விரிசல் விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தங்கள் 737 NG ரக விமானங்களின் சிறகு அருகே விரிசல்விட வாய்ப்புள்ளதாக போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதால் உலக அளவில் பல்வேறு விமான நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள 737 NG விமானங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.
விமானத்தின் உடல் பகுதியுடன் சிறகை இணைக்கும் 'பிக்கில் ஃபோர்க்' எனும் பகுதியில் விரிசல் உண்டாகலாம் என்று போயிங் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 737 NG ரகத்தைச் சேர்ந்த 50 விமானங்கள் உலகெங்கும் விமான சேவைக்கு உட்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏ.எஃப். பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
"விமானத்தில் விரிசல் இருந்தாலும், அது விமானத்தின் பாதுகப்பாய் பாதிக்கவில்லை. எந்த விமானமும் பறக்க முழுமையாக பாதுகாப்பு இல்லாத சூழலில் நாங்கள் அதைப் பயன்படுத்த மாட்டோம்," என்று க்வாண்டாஸ் தெரிவித்துள்ளது.
இதுவரை 30,000 முறைக்கும் மேல் பறந்துள்ள 737 NG விமானங்களை சோதனைக்கு உள்படுத்த கடந்த மாதம்தான் அமெரிக்க அரசின் விமானப் போக்குவரத்து முகமையான ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அறிவுறுத்தியது.
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
கடந்த ஆண்டு அக்டோபரில் போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானம் இந்தோனீசியாவில் விபத்துக்கு உள்ளானது. இந்த ஆண்டு மார்ச் மாதம் இதே ரகத்தைச் சேர்ந்த இன்னொரு விமானம் எத்தியோப்பியாவில் விபத்துக்கு உள்ளானது. இந்த இரு விபத்துகளில் 346 பேர் உயிரிழந்தனர்.
இப்போது உலகெங்கும் 737 மேக்ஸ் ரக விமானங்கள் போக்குவதுக்கு பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில், போயிங் தயாரிப்பில் மேலும் ஒரு குறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.